Published : 12 Jul 2019 10:10 AM
Last Updated : 12 Jul 2019 10:10 AM

சுகாதார அதிகாரிகள் இன்றி செயல்படும் மதுரை மாநகராட்சி: மாநில சுகாதாரத் துறை அலட்சியத்தால் பணிகள் பாதிப்பு

மதுரை மாநகராட்சியில் முக்கியத் துவம் வாய்ந்த சுகாதார அதிகாரி, உதவி சுகாதார அதிகாரி பணியி டங்கள் காலியாக இருப்பதால் சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் சுகாதார அதிகாரி நியமனம் தாமதமடைவதாகக் கூறப்படுகிறது.

மாநகராட்சியில் மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் முறையாக செயல்படுகிறதா என ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை சுகாதார அதிகாரி மேற்கொள்ள வேண்டும்.

மதுரை மாநகராட்சியில் சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் சதீஷ்ராகவன் கடந்த 6 மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக வேறொருவரை நியமிக்காமல் மாநில சுகாதாரத் துறை மெத்தனமாக இருந்தது. சுகாதார அதிகாரி பொறுப்பை உதவி சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் சரோஜா கூடுதலாகக் கவனித்து வந்தார். இந்நிலையில், சரோஜாவும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு உதவி சுகாதார அதிகாரி சரோஜாவுக்கு பணியிட மாற்றம் தொடர்பான ஆணை வந்தது. உடனடியாக அன்று மாலையிலேயே அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரது பொறுப்புகளை மூத்த மருத்துவக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கச் சொல்லி அனுப்பி வைக்கப்பட்டார்.

எதற்காக வேகவேகமாக இந்த இடமாற்றம் நடந்தது என்பது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: சரோஜாவுக்கு, வில்லிபுத்தூர் சொந்த ஊர். அங்கிருந்துதான் அவர் தினமும் மதுரைக்கு பணிக்கு வந்தார். ஆணையாளர் கண்டித்த பின்னரே அவர் மதுரையில் குடியிருக்கத் தொடங்கினார். அதன்பிறகும் 2 நாட்களுக்கு ஒருமுறை சொந்த ஊர் சென்றுவிட்டு பணிக்குத் தாமதமாக வந்தார். சுகாதார அதிகாரி (பொறுப்பு) பணியிடத்தில் இருக்கும்போது தனியாக ப்ராக்டீஸ் (கிளினிக் பணி) செய்யக்கூடாது. அந்த விதிமுறையை அவர் மீறியதாக புகார் உள்ளது. மேலும், சுகாதாரப் பணிகளில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது சரோஜாவின் உதவி சுகாதார அதிகாரி பணியிடத்துக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றிவரும் வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார அதிகாரி பணியிடங்களை நிரப்ப, அதற்கான பேனல் (பதவி உயர்வு பட்டியல்) தயார் செய்யும் பணியை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. விரைவில் மதுரை மாநகராட்சிக்கு சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார் என்று கூறினார்.

இதுகுறித்து உதவி சுகாதார அதிகாரி சரோஜாவிடம் கேட்டபோது, ‘‘என்னை பொறுத்தவரையில் நான் சிறப்பாகவே பணிபுரிந்தேன். எந்த சர்ச்சையிலும், குற்றச்சாட்டிலும் சிக்கவில்லை. இடமாறுதலும் கேட்கவில்லை. பணி தொடர்பாக சில விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இடமாற்றப்பட்டேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x