Published : 06 Jul 2019 05:30 PM
Last Updated : 06 Jul 2019 05:30 PM
விவசாயத்தில் கூலியாள் பற்றாக்குறை, இயந்திரமயமாதல் உள்ளிட்டவற்றினால் கதிர் அரிவாளின் தேவை வெகுவாய் குறைந்துவிட்டது. எனவே தமிழக அளவில் இத்தொழிலிலில் பிரசித்தி பெற்றிருந்த பூதிப்புரம் தற்போது களையிழந்து காணப்படுகிறது.
தேனி அருகே உள்ள பூதிப்புரம் பண்ணை அரிவாள் எனப்படும் கதிர் அரிவாள் தயாரிப்பிற்கு பிரபலம். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பட்டறைகள் இங்கிருந்தன. திண்டுக்கல், மதுரையில் இருந்து இரும்பு ரோல் அல்லது இரும்புத் துண்டுகளை கிலோ கணக்கில் வாங்கி வருவர். இவற்றை தீயில் பழுக்க காய்ச்சி சுத்தியலால் அடித்து உரிய வடிவம் கொடுப்பர்.
இங்கு தயாராகும் கதிர் அரிவாளுக்கு ஈரோடு, திருச்செங்கோடு, செஞ்சி, திண்டிவனம், சேலம், கர்நாடாகா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் தேவை அதிகம் இருந்தது. இதனால் வியாபாரிகள் இங்கு குழுமி இவற்றை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்வர்.
இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முந்தைய நிலை.
தற்போது விவசாயம் இயந்திரமாகிவிட்டது. கதிர், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை இயந்திரம் மூலமே அறுவடை செய்து அதன் மணிகளும் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. இதனால் கூலியாள் மூலம் கதிர்களை அறுப்பது வெகுவாய் குறைந்துவிட்டது.
எனவே விவசாயம் சார்ந்த இத்தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து தற்போது பரிதாபநிலையில் உள்ளது.
தற்போது இப்பகுதியில் 30 பட்டறைகளே உள்ளன. அதிலும் வயதானவர்கள்தான் இப்பணியில் உள்ளனர். தொழிலில் எதிர்காலம் இல்லாததால் இளையோர் பலரும் இதனை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. சிறுமுதலாளிகளாக இருந்த இவர்கள் தற்போது பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளனர். இதனால் பலரும் வியாபாரிகளிடம் அரிவாள் தயாரிக்கும் கூலியாட்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இது குறித்து இவர்கள் கூறுகையில், முன்பெல்லாம் ஒருநாளைக்கு கணவன், மனைவி இருவருக்கும் ரூ.500 கூலி கிடைக்கும். சர்வசாதாரணமாக நூறு உருப்படிகளை தயாரித்து விடுவோம். தற்போது விவசாயத்தில் கூலியாள் மூலம் கதிரறுப்பு நடைபெறுவதில்லை. இதனால் இதன் தேவை தற்போது வெகுவாய் குறைந்துவிட்டது. வேறுவழியின்றி சிலர் மட்டும் இத்தொழிலை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். காலமாற்றமும், விவசாயத்தில் புகுத்தப்பட்ட தொழில்நுட்பமும் இத்தொழிலை முடக்கி விட்டது என்றனர்.
இது குறித்து இரண்டு தலைமுறையாக இத்தொழில் செய்து வரும் முருகன் என்பவர் கூறுகையில், "விவசாயத்தில் மட்டும் கூலியாள் பற்றாக்குறை ஏற்படவில்லை. எங்கள் தொழிலிலும்தான் உள்ளது. முன்பெல்லாம் இரும்பை காய்ச்ச துருத்தி மூலம் காற்று ஊதுவர். இதற்காக தொடர்ந்து பல மணி நேரம் நீளமானகுச்சியை அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது வயதானவர்கள் கூட இந்த வேலைக்கு வருவதில்லை. எனவே மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றி அமைத்திருக்கிறோம்.
சாதாரண இரும்பில் செய்யப்படும் அரிவாள் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. இது சில நாட்களிலேயே கூர் மழுங்கிவிடும். இன்னொன்று முதல் தரத்தில் செய்கிறோம். அதன் விலை ரூ.150. இது பல மாதங்களாலும் மழுங்காமல் இருக்கும். அளவும் பெரியதாக இருப்பதால் அறுப்பிற்கும் வசதியாக இருக்கும். கரி மூடை விலையும் ரூ.850ஆக உயர்ந்து விட்டது. தயாரிக்கும் பொருள் விற்பனையாகாமல் பல பட்டறைகளிலும் முடங்கிக் கிடக்கிறது. எங்கள் தலைமுறையோடு இத்தொழில் முடிந்துவிடும்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இயந்திரமயமும், காலமாற்றமும் பல்வேறு புதுமைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. இதன் பிடியில் சிக்கி பழமையும், பாரம்பரியமும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அளவில் கதிர் அரிவாள் தயாரிப்பிற்கு பெயர் பெற்ற பூதிப்புரம் தற்போது அதன் இறுதிநிலையில் உள்ளது.
ஒருகாலத்தில் திருமணம், குழந்தைகளின் கல்வி என்று எங்கள் குடும்பத்தை இத்தொழில் தாங்கிப்பிடித்தது. அந்த எண்ணத்திலேயே எங்கள் இறுதிக்காலம் வரை அரிவாள் தயாரிப்பிலே ஈடுபடுவோம். இத்தொழில் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தொழிலாளிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT