Published : 02 Jul 2019 04:42 PM
Last Updated : 02 Jul 2019 04:42 PM

மதத்தை வைத்து பாஜக அரசியல்; மயங்கியுள்ள மக்கள்: நாராயணசாமி கண்டனம்

பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், மக்கள் அதில் மயங்கியுள்ளதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி டிஜிபி சுந்தரி நந்தாவின் தாயார் பார்வதி  மறைவையடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உதகை வந்தார். உதகை அருகே உள்ள குருத்துக்குளி கிராமத்துக்கு சென்று பார்வதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி உடனிருந்தார்.

பின்னர் அவர் உதகை விருந்தினர் மாளிகை வந்தார். அவருக்கு அங்கு போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  அங்கு, காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களைச் சந்தித்தார்.

பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் சந்தித்து, அவரே தலைவராகத் தொடர்ந்து, கட்சியை வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.

காங்கிரஸ் கட்சியைத் தோல்வியிலிருந்து அவர் மீட்க முடியும். கடந்த காலங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு இருந்தது. அவர்கள் அதை முறியடித்து வெற்றிகரமாகச் செயல்பட்டனர்.

சோனியா காந்தி அரசியலுக்கே வர மாட்டேன் என்றார். காங்கிரஸ் கட்சி பலவீனமாகக் கூடாது என்பதால், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த அவர் அரசியலுக்கு வந்தார். ராகுல் காந்தி தலைமைக்கு எதிர்ப்பும் இல்லை, போட்டியும் இல்லை. அனைத்துக் கட்சியினரும் அவர் தலைவராக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதை வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது.

பாஜக கட்சியில் பல அமைச்சர்கள், தலைவர்களின் பிள்ளைகள் அரசியலில் உள்ளனர். பிரதமர் மோடி மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளைத் தந்தார். வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பேன், ஒரு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாயக் கடன் ரத்து, வெளிநாட்டு மூலதனம் கொண்டு வந்த பொருளாதார வளர்ச்சி காண்போம் என்றார். ஆனால், எதுவும் செய்யவில்லை.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக சுமார் 5.8 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 2019-ம் தேர்தலில், பிரதமர் சாதனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்யாமல், பாகிஸ்தான் மற்றும் இந்து மதத்தை நோக்கியே பிரச்சாரம் செய்தார்.  மக்களின் மத உணர்வைத் தூண்டி, பாகிஸ்தான் நாட்டின் மீதான வெறுப்பைப் பயன்படுத்தி அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் எனும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். மக்கள் அதில் மயங்கியுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் எம்எல்ஏக்கள் சிலர் அமைச்சர் பதவிகள் கேட்டு வருகின்றனர். ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அவர்களிடம் பேசி ராஜினாமாவை திரும்பப் பெற வைக்க முயற்சி செய்கின்றனர்.

ஒரே நாடு, ஒரே மதம் என்பது மோடி ஆட்சியின் கொள்கை. இந்தியைக் கட்டாய மொழியாக்க முயற்சி செய்து வருகின்றனர். தென் மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தாய்மொழி உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புள்ளவர்கள் கற்றுக்கொள்ளலாம். யார் மீது மொழியை திணிக்கக்கூடாது.

காங்கிரஸ் மற்றும் திமுக இந்தித் திணிப்பை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளாது. புதிய கல்விக் கொள்கை விவாதத்துக்கு வரும் போது எங்களின் எதிர்ப்பை தெரிவிப்போம். எங்கள் மாநிலத்தில் 5 மொழிகள் உள்ளன. நாங்கள் இந்தியைக் கட்டாய மொழியாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் மாநில உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. ரேஷன் அட்டை குடும்பத்தின் அடையாளம். இதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் கட்டளையை ஏற்றுச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை. கடல் நீரைக் குடிநீராக்குவதுதான் தீர்வு. அந்த திட்டத்தைச் செயல்படுத்தினால்தான் மக்களுக்கு குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது''.

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x