Published : 10 Jul 2019 05:04 PM
Last Updated : 10 Jul 2019 05:04 PM
மதுவுக்கு எதிராகப் போராடிவரும் சட்டக்கல்லூரி முன்னாள் மாணவி நந்தினியின் திருமணம் எளிமையான முறையில் இன்று (புதன் கிழமை) நடந்துமுடிந்தது.
மதுரைக்கு அருகே தென்னமநல்லூர் பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலில் நந்தினி - குணா ஜோதிபாசு திருமணம் நடைபெற்றது.
இது குறித்து நந்தினி இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியில், "எங்கள் திருமணம் இன்று எளிமையாக எங்கள் குலதெய்வம் பட்டவர் கோயிலில் நடந்து முடிந்தது. எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஜோதிபாசுவின் வீட்டார் மட்டும் இதில் கலந்து கொண்டனர். கோயிலில் என் தந்தை உறுதிமொழியை வாசிக்க நானும் ஜோதிபாசுவும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். ஏற்கெனவே 5-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கைது நடவடிக்கையால் நின்றுபோனது. ஆகவே, ஜாமீன் கிடைத்தவுடனேயே இன்றைக்கே எளிமையாக நெருங்கிய உறவினர்களுடன் திருமணத்தை முடித்துக் கொண்டோம்" என்றார்.
நந்தினியை கரம்பிடித்த குணா ஜோதிபாசுவின் சொந்த ஊர் திண்டுக்கல். இவர் பி.எஸ்.சி படித்துள்ளார்.
யார் இந்த நந்தினி?
மதுரையைச் சேர்ந்தவர் ஆனந்தன் (55). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நந்தினி (24) வழக்கறிஞர், மது ஒழிப்புப் போராளி. தங்கை நிரஞ்சனா சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார்.
நந்தினி படிக்கும்போதே தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து மதுக் கடைகளை மூட வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் மீதும் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நந்தினி 2 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நந்தினி தனது தந்தையுடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபோது, போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், போலீஸாரைத் தாக்கியதாகவும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நந்தினி கடந்த 27-ம் தேதி கைதானார். இதனால் அவரது திருமணம் தடைபட்டது. இந்நிலையில் நேற்று (ஜூலை 9-ம் தேதி) நந்தினிக்கும் அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT