Published : 05 Jul 2019 03:27 PM
Last Updated : 05 Jul 2019 03:27 PM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்வதற்காக 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பரோல் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நளினி, 6 மாத காலம் பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ''27 ஆண்டுகளாக நான் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு மாத பரோல் கூட எனக்கு வழங்கப்படவில்லை.
என்னுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை விடுவிக்கவில்லை.
20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதிகளை விடுவிக்க வழி வகை செய்யும் வகையில் 1994-ம் ஆண்டு இயற்றப்பட்ட, ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் சட்டத்தின் படி என்னை முன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரியுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை வாசம் அனுபவித்து வரும் எழுவரையும் விடுவிக்கக் கோரி, தமிழக அரசு ஆளுநரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரைத்தும் இன்னும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தன் தாத்தா பாட்டியுடன் லண்டனில் வசிக்கும் என் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் எனக்கு ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டும் என வேலூர் சிறைத்துறை டிஐஜியிடம் நான் அளித்த மனு நிலுவையில் உள்ளது.
அதேபோல என் தாய் பத்மாவதியும் இதே கோரிக்கையுடன் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த இரண்டு மனுக்களும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஆறு மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையில் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் நேரில் ஆஜராகி வாதாடினார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன் சரியாக பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜரான அவர் தனது கையில் 3 பக்கங்களில் எழுதி வைத்திருந்த குறிப்புகளை கண்ணீருடன் வாசித்தார்.
முதலில் எனது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை இன்று நேரில் ஆஜராகி வாதாட அனுமதித்தற்கு நன்றி.
மகளின் திருமண வைபவம், கோயில் நேர்த்திகடன் பிரார்த்தனைகள் என நிறைய கடமைகள் எனக்கு இருப்பதால் 6 மாத காலம் பரோல் வழங்க வேண்டும்.
என் மாமனார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரையும் பார்க்க வேண்டும்.
என் குழந்தை சிறையில்தான் பிறந்தது. 24 ஆண்டுகளாக நானும் என் கணவரும் சிறையில்தான் இருக்கிறோம். என் மகளின் திருமணத்திலாவது நான் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன் என கண்ணீர் மல்க பேசினார்.
கடந்த முறை அவரது தந்தை மரணத்துக்காக பரோல் வழங்கப்பட்டபோது பாதுகாப்பு செலவை அரசு தன்னிடம் வசூலித்ததாகக் கூறிய நளினி இம்முறை தனது பரோல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
அரசு தரப்பில், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி வாதாடினார். சிறை விதிகளின்படி 6 மாத காலம் பரோல் வழங்க இடமில்லை. எனவே, 30 நாட்கள் மட்டும் பரோல் வழங்கலாம் என்றார்.
இதனையடுத்து நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேவேளையில் நளினிக்கு சில நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்தது. மகளின் திருமண வேலைகளை மட்டுமே பார்க்க வேண்டும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது.
போலீஸாரின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். 24 மணி நேரமும் போலீஸ் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். பரோல் முடிந்தவுடனேயே சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதேபோல் பரோல் காலத்தில் பாதுகாப்பு செலவை அரசேதான் ஏற்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT