Published : 06 Nov 2014 07:55 AM
Last Updated : 06 Nov 2014 07:55 AM
நான் காங்கிரஸ் கட்சியில் இணந்த தாக யாரோ வதந்தி கிளப்பி விட்டார்கள் என்று நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் கூறியுள்ளார்.
நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக், நேற்று சத்தியமூர்த்திபவனுக்கு சென்று காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். நாடாளும் மக்கள் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் கார்த்திக் இணைக்கப் போவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் நேற்று மாலை ’தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.
நீங்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணையப் போவதாக தகவல் வந்ததே?
அது யாரோ கிளப்பி விட்ட வதந்தி. நான் எனது கட்சியை கலைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் எங்கள் நட்பு இன்னும் தொடர்கிறது என்பதைச் சொல்வதற்காகவும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள இளங்கோவனுக்கு பாராட்டுத் தெரிவிக்கவுமே நான் சத்திய மூர்த்தி பவனுக்குச் சென்றேன்.
ஜி.கே.வாசன் தனிக் கட்சி தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் காங்கிரஸின் நிலைமை என்னவாகும்?
ஒரு தேர்தலில் தோற்றுவிட்டால் கட்சியே ஒன்றுமில்லாமல் போய் விடும் என கணக்குப் போடுவது தவறு. கடந்த தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அதனால் பாஜக-வுக்கு வாய்ப் பளித்தார்கள். இப்போது அந்தக் கட்சிக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஜி.கே.வாசன் சார் ரொம்பப் பெரிய மனிதர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் மீண்டும் காங்கிரஸுக்கு வரவேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய பாஜக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
செயல்பட்டால்தானே சொல்வதற்கு. குஜராத்தில் ஏதோ சாதித்ததைப் போல் ஒரு மாயையை உருவாக்கி மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்திருக் கிறது. மோடியை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஆட்சி நடத்த திறமை யான ஆட்கள் யாரும் அந்தக் கட்சியில் இல்லை.
பாகிஸ்தானும் சீனாவும் கொடுக்கும் தைரியத்தில் தமிழக மீனவர்களை தூக்கில் போடுமளவுக்கு துணிந்துவிட்டது இலங்கை அரசு. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இலங்கைக்கு இந்த அளவு துணிச்சல் வரவில்லையே. 125 கோடி மக்களை சிறந்த முறையில் வழி நடத்த 129 வருட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். இதை மக்களும் இப்போது உணர ஆரம்பித்தி ருக்கிறார்கள்.
தமிழக காங்கிரஸின் நிலை பரிதாபமாக இருக்கிறதே?
ஜெயிப்பதும் தோற்பதும் காங்கிரஸுக்கு சாதாரணம். தமிழ் நாட்டைப் பொறுத்த வரை இப்போது இருப்பது புது காங்கி ரஸ். மக்களின் ஆதரவும் இந்த காங்கிரஸுக்குத்தான் இருக்கும்.
உங்கள் வீட்டின் சொத்து விவகாரம் போலீஸில் புகார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டதே.. உண்மையில் என்னதான் பிரச்சினை?
அப்பா சம்பாதித்த சொத்து பிள்ளைகளைத்தானே சேர வேண்டும். அதை எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டிருந் தால் பிரச்சினை ரோட்டுக்கு வந்திருக்காது. ஆனால், சிலருக்கு பேராசை அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இப்போது பிரச்சினை சுமுகமாக முடிவது போல் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT