Published : 02 Jul 2019 02:03 PM
Last Updated : 02 Jul 2019 02:03 PM
விருதுநகரில் அரசு விரைவுப் பேருந்தின் பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் காரில் வந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்ச நாயக்கனூரைச் சேர்ந்தவர் ஐயப்பன் (53). இவரது தாய் கமலம் (70). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருவனந்தபுரத்தில் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று காரில் புறப்பட்டனர். காரை ஐயப்பன் ஓட்டி வந்தார். அவருடன் பொள்ளாச்சி அருகே உள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (50), ஆனைமலையைச் சேர்ந்த சேகர் (52) ஆகியோரும் காரில் சென்றனர்.
விருதுநகர் சாத்தூர் நான்கு வழிச்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அதிவேகமாக கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தின் பின் பகுதியில் கார் வேகமாக மோதியது.
இதில் காரில் சென்ற சுப்ரமணியன், சேகர், கமலம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐயப்பன் பலத்த காயமடைந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் விருதுநகர் கிழக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்த ஐயப்பன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஐயப்பன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த 3 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT