Last Updated : 09 Jul, 2019 02:06 PM

 

Published : 09 Jul 2019 02:06 PM
Last Updated : 09 Jul 2019 02:06 PM

பெற்றோரின் ரூ.1.5 கோடி மதிப்பிலான வீட்டை எழுதி வாங்கி வெளியேற்றிய மகன்: சொத்துப் பத்திரம் ரத்து

பெற்றோரின் ரூ.1.5 கோடி மதிப்பிலான வீட்டை  எழுதி வாங்கிய பின்பு வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் பெயரில் இருந்த சொத்துப் பத்திரம் புதுச்சேரியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் சங்கரதாஸ் (61). இவரது மனைவி சிவகாமி (59). இவர்களுக்கு ராஜ்மோகன் (35) என்ற மகனும், சவிதா ( 29) என்ற மகளும் உள்ளனர். சவிதா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

ஐடிஐ படித்த ராஜ்மோகன், சாதனா என்ற பெண்ணைக் காதலித்ததால் அவரையே பெற்றோர் திருமணம் செய்து வைத்து ஒரே குடும்பமாக வசித்தனர். அவ்வீடு தந்தை சங்கரதாஸ் பெயரில் இருந்தது. அதன் மதிப்பு ரூ.1.5 கோடி.

வர்த்தகம் செய்ய வங்கியில் கடன் பெற உள்ளதால் தந்தை பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தர ராஜ்மோகன் வற்புறுத்தியுள்ளார். தன் மகனுக்காக அவர் பெயரில் இருந்து 1,614 சதுர அடி வீட்டை ராஜ்மோகன் பெயருக்கு கடந்த 2016-ல் மாற்றி தந்தை எழுதித் தந்தார். வீட்டை எழுதி வாங்கிய பின்பு பெற்றோரை சுமையாகக் கருதியுள்ளார்.

பின்னர் வீட்டிலிருந்து பெற்றோர் சங்கரதாஸ்- சிவகாமியை மகனே வெளியேற்றினார். அதையடுத்து மகள் வீட்டுக்குச் சென்றார். அங்கு மகள் வீட்டில் வருவாய் பற்றாக்குறை சூழல் நிலவியது.

இதைத் தொடர்ந்து சாரம் பழைய கலெக்டர் அலுவலகத்திலுள்ள முதியோர் பராமரிப்புத் தீர்வு நடுவர் தீர்ப்பாய அலுவலகத்தில் புகார் தந்தார். அதில் தனது வீட்டை ஏமாற்றிப் பறித்துக்கொண்டு மகன் தங்களை வெளியேற்றி விட்டதால் அச்சொத்தை மீட்டுத் தர கோரியிருந்தார்.

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் மகன், உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சொத்து எனது பெயரில் உள்ளது. அவர்களை வீட்டினுள் அனுமதிக்க முடியாது என்று அவரது மகன் உறுதியாக குறிப்பிட்டார். இரண்டு தள வீடு என்பதால் மேல்மாடியில் பெற்றோரை இருக்க அனுமதிக்க ஆலோசனை தரப்பட்டது. ஆனால் அவர் மகன் ஏற்கவில்லை.

இந்நிலையில் மகனின் பெயரில் இருந்த 1,614 சதுர அடி பரப்பு கொண்ட வீட்டின் பத்திரத்தை தீர்ப்பாய நடுவர் ரத்து செய்துள்ளார். இந்த சொத்து சங்கரதாஸ்-க்கு சொந்தம் எனவும் அதை அவரிடம் திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டது. உத்தரவு நகலை சப் கலெக்டர் சுதாகர், பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கரதாஸ்– சிவகாமியிடம் ஒப்படைத்தார். சொத்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்துக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறைக்கு நகல் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x