Published : 12 Jul 2019 08:16 AM
Last Updated : 12 Jul 2019 08:16 AM
சென்னை-சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என திமுக எம்.பி.க்கள் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் மனு கொடுத்துள்ளனர்.
மத்திய அரசின் ‘பாரத் மாலா’ திட்டத்தின் கீழ் சுமார் ரூ.10,000 கோடி செலவில் சென்னை-செலம் இடையே எட்டு வழி பசுமைச் சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 276 கி.மீ. நீளம் கொண்ட இந்த திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டது.
இந்த திட்டத்துக்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிலம் கையகப்படுத்த தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், திமுகவின் மக்களவை எம்.பி.க்களான எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), கணேசன் செல்வம் (காஞ்சிபுரம்), டாக்டர் செந்தில்குமார் (தர்மபுரி), கவுதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி) மற்றும் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை) ஆகியோர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேற்று காலையில் சந்தித்தனர். அப்போது, எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அவரிடம் ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில், அந்த சாலை கடந்து வரும் ஐந்து தொகுதிகளின் திமுக எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்ல சுற்றுச்சாலை (Ring Road) வழியாகவே செல்ல வேண்டும். மாற்றுத்திட்டம்சென்னை-வண்டலூர் மற்றும் சென்னை-காஞ்சிபுரம் வரை உள்ள குறுகிய (Bottle neck) வழித்தடமே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியமான காரணம். இந்த வழித்தடத்தை அகலப்படுத்தினாலே சென்னை-சேலம் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்க முடியும்,புதிதாக அமைய உள்ள எட்டு வழிச் சாலை திட்டத்திலும் இதற்கான வரைவு திட்டம் இல்லை. ஏற்கெனவே உள்ள சென்னை-சேலம் இடையிலான மூன்று வழித்தடங்களைவிட புதிதாக அமைய உள்ள எட்டு வழிச் சாலைக்கும் 40 கி.மீ. மட்டுமே பயண தூரம் குறையும்.
இதற்காக 10,000 கோடி ரூபாய் விரயம் செய்வதும் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதும் ஏற்புடையது அல்ல. இதனால் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும்.
பொதுமக்கள் போராட்டம்
இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், 5 மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்களும் விவசாயிகளும் தங்கள் உடைமைகளையும், நிலங்களையும் காப்பாற்றிக்கொள்ள குழந்தைகளுடன் நடுத்தெருவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ஏற்கெனவே உள்ள மூன்று வழித்தடங்களை யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் விரிவாக்கம் செய்ய வேண்டுகிறோம். சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT