Last Updated : 02 Jul, 2019 12:00 AM

 

Published : 02 Jul 2019 12:00 AM
Last Updated : 02 Jul 2019 12:00 AM

காரைக்கால் பிராந்தியத்தின் முதல் தமிழ்வழி அரசு உயர்நிலைப் பள்ளியின் வைர விழா: ஜூலை 4-ம் தேதி நடைபெறுகிறது

காரைக்கால் பிராந்தியத்தின் முதல் தமிழ்வழி அரசு உயர்நிலைப் பள்ளியின் வைர விழா 4-ம் தேதி நடைபெற உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக் குட்பட்ட பிராந்தியங்கள் முன்பு பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காரணத்தால் பிரெஞ்சு மொழி வழியில் கற்பிக்கும் பள்ளிகளே இருந்தன. சுதந்திரத்துக்குப் பின், தமிழ் வழியிலான பள்ளிகள் தொடங்கப்பட்டன. அந்த வகை யில், காரைக்கால் பிராந்தியத்தில் தமிழ் வழியில் கல்வி போதிக்கும் முதல் அரசு உயர் நிலைப் பள்ளி, காரைக்கால் பாரதியார் சாலையில் கிராம்புத் தோட்டம் பகுதியில் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தப் பள்ளிக்கு புரவலர் கோவிந்தசாமிப் பிள்ளை- சுப்பம்மா தம்பதியர் இடம் அளித்ததுடன், கட்டிடங்களையும் கட்டிக் கொடுத்தனர். தொடக்கத்தில் சுப்பம்மா உயர்நிலைப் பள்ளி என்று அழைக்கப்பட்டு வந்த இப்பள்ளிக்கு, பின்னர் கோவிந்த சாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளி என்ற பெயர் புதுச்சேரி அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், இப்பள்ளியின் வைர விழா வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இப்பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் புலவர் திருமேனி நாகராசன் கூறியது: பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தி யங்களில் பிரெஞ்சு மொழியே பயிற்று மொழியாக இருந்தது. தமிழ் 2-வது மொழியாக கற்பிக்கப்பட்டது.

1954-ல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற பின்னர், காரைக்காலில் அரசு சார்பில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்வழி உயர்நிலைப் பள்ளி கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியாகும். தமிழக அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய எஸ்எஸ்எல்சி தேர்வை முதன் முதலாக 1961-62-ம் கல்வியாண்டில் இப்பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்கள் எழுதினர். காரைக்கால் கல்வித்துறை வரலாற்றில் இந்நிகழ்வு ஒரு மறு மலர்ச்சியாகவே கல்வியாளர் களால் பார்க்கப்பட்டது என்றார்.

பள்ளித் தலைமையாசிரியர் ஏ.பாலசுப்ரமணியன் கூறியது: 1970-ம் ஆண்டு வரை இப்பள்ளி இருபாலருக்குமான பள்ளியாக செயல்பட்டு வந்தது. தற்போது ஆண்களுக்கான பள்ளியாக இயங்கி வருகிறது. தொடர்ந்து தேர்ச்சி விகிதம் அதிக அளவிலேயே இருந்து வருகிறது. வைர விழா பரிசாக முதல் முறையாக கடந்த(2018-19) கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கல்வி, விளையாட்டு, நுண்கலை போன்றவற்றில் இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர் என்றார்.

முன்னாள் மாணவர்கள் மன்றத் தலைவரும், வைர விழாக் குழு தலைவருமான ஜி.கே.நாராயண சாமி கூறியது:

இங்கு படித்த பலர் பல்வேறு வகையில் உயர்ந்த நிலையில் உள்ளனர். தற்போது முன்னாள் மாணவர்களின் ஏற்பாட்டில் வைர விழா நடைபெற உள்ளது. அவர்களது பங்களிப்பில் ரூ.5 லட்சம் செலவில் வைரவிழா நினைவரங்கம் கட்டப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x