Last Updated : 05 Jul, 2019 09:56 AM

 

Published : 05 Jul 2019 09:56 AM
Last Updated : 05 Jul 2019 09:56 AM

பதவியை எதிர்பார்க்கவில்லை; ஒரு பொறுப்பாக, அங்கீகாரமாக கருதவில்லை: உதயநிதி ஸ்டாலின்

இந்தப் பதவியை எதிர்பார்க்கவில்லை. இதனை எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பாக, அங்கீகாரமாக கருதவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் முக்கியப் பதவிகளில் ஒன்றான இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் இருந்த அப்பதவி, தற்போது உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு வெளியானவுடன் திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடம் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினார் உதயநிதி.

தனக்கு கொடுக்கப்பட்டுள்ள இளைஞரணிச் செயலாளர் பதவி குறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் நேற்று பேசும் போது, “இந்தப் பதவியை எதிர்பார்க்கவில்லை. இதனை எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பாக, அங்கீகாரமாக கருதவில்லை. ஒட்டுமொத்த திமுக இளைஞர்களுக்கும் கொடுக்கப்பட்ட அங்கீகரமாக கருதுகிறேன். தொண்டர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நிறைய சவால்கள், வேலைகள் உள்ளன. பேசுவதை விட செயலில் காட்டவேண்டும் என விரும்புகிறேன். கட்சியை வளர்ப்பதும், இளைஞரணியை மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பதும், புதிய இளைஞர்களைச் சேர்ப்பதும் இலக்காக இருக்கும்.

கண்டிப்பாக படங்களில் நடிப்பேன். அரசியலுக்கென்று தனியாக நேரம் ஒதுக்குவேன். உள்ளாட்சி மன்றத் தேர்தல் இன்னும் அறிவிக்கவில்லை. அதில் போட்டியிடுவது எல்லாம் தலைமை தான் முடிவு செய்யும்” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

திமுக இளைஞரணிச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாபெரும் மக்கள் இயக்கமாம் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் என்ற இணையற்ற பொறுப்பை எனக்கு வழங்கிய கழகத் தலைவர் ஸ்டாலினுக்கும், பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் பெருந்தகை தாத்தாவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்கத்தின் அடித்தளம் இளைஞர்கள். அந்த இளைய சக்தியை ஒருங்கிணைக்கும் கடமையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செய்வேன். பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து உன்னதமான செயல்பாடுகளின் மூலமாக கழக வெற்றிகளுக்கும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்காகவும் பாடுபட உறுதி ஏற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம்? - பத்திரிகையாளர் எஸ்.பி.லக்‌ஷ்மணன் பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x