Published : 12 Jul 2019 09:53 AM
Last Updated : 12 Jul 2019 09:53 AM
கடந்த ஓராண்டுக்கு முன்னர் வெள்ளம் பாய்ந்தோடிய காவிரி ஆறு தற்போது வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது. பாசன வசதி அளித்து வரும் ராஜவாய்க்காலிலும் தண்ணீர் இல்லாததால், விளைநிலங்களுக்கான தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், மோகனூர் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. காவிரி ஆற்றை ஒட்டி ஜேடர்பாளையத்தில் பாசன வசதிக்காக கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜவாய்க்கால் வெட்டப்பட்டது. இந்த வாய்க்கால் ஜேடர்பாளையம் தொடங்கி மோகனூர் மற்றும் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வரை பாய்ந்து சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.
இதன்மூலம் பரமத்தி வேலூர் தொடங்கி மோகனூர் வரை பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளை நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் வாழை, வெற்றிலை, கரும்பு, மரவள்ளி போன்றவை பிரதான பயிர்களாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வெள்ளம் பாய்ந்து ஓடிய காவிரி ஆறு ஓராண்டு முடிவில் தற்போது வறண்டு வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது. ஆற்றின் ஒரு பகுதியில் சிறு ஓடை போல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆற்றங்கரையோர கிராம மக்கள் காவிரி ஆற்றை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ராஜவாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், இதன்மூலம் பாசன வசதி பெற்று வரும் விளைநிலம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மோகனூர் மணப்பள்ளியைச் சேர்ந்த வெற்றிலை விவசாயி குழந்தைவேல் கூறுகையில், காவிரியில் தண்ணீர் இல்லாததால், வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், தண்ணீரை விலைக்கு வாங்கி தோட்டத்திற்கு பாய்ச்சி வருகிறோம். தண்ணீர் இல்லையென்று விவசாயப் பணிகள் மேற்கொள்ளாமல் இருந்தால் உடல் சோர்வு ஏற்பட்டு விடும். எனவே, லாபம் இல்லையென்றாலும் வேலை செய்து வருகிறோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT