Last Updated : 02 Jul, 2019 10:44 AM

 

Published : 02 Jul 2019 10:44 AM
Last Updated : 02 Jul 2019 10:44 AM

கோவை அருகே விவசாய நிலத்தில் போர் விமானத்தின் எரிவாயு டேங்க் விழுந்ததால் பரபரப்பு

கோவை அருகே விவசாய நிலத்தில் போர் விமானத்தின் எரிவாயு டேங்க் விழுந்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை அடுத்த சூலூரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான படைத்தளம் உள்ளது. இங்கிருந்து தினசரி போர் விமானங்கள் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குப் பயிற்சிக்குச் சென்று வருவது வழக்கம். அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மிக் - 21 ரக போர் விமானம் பயிற்சிக்குப் புறப்பட்டது.

அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விமானப்படை வீரர்கள் இருந்தனர். இந்த விமானம் சூலூர் அருகே கடந்து செல்லும் போது, அதில் கூடுதலாக இணைக்கப்பட்டிருந்த 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிவாயு டேங்க், இருகூர் சாலை அத்தப்ப கவுண்டன் புதூரில் உள்ள விவசாயி சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 8.30 மணிக்கு விழுந்தது.

விழுந்த வேகத்தில் அது வெடித்து, துண்டு துண்டாகச் சிதறியது. அச்சமயம் அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படவில்லை. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது ஏதோ ஒரு பொருள் விழுந்து கிடப்பதைக் கண்டு சூலூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சூலூர் போலீஸார் மற்றும் இது குறித்து தகவல் அறிந்த சூலூர் விமானப் படைத்தள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து துண்டு துண்டாக நொறுங்கிய எரிவாயு டேங்க்கைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த எரிவாயு டேங்க் காலியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதே சமயம், கூடுதலாக இணைக்கப்பட்டிருந்த இந்த எரிவாயு டேங்க்கை பயிற்சியின் போது விமானத்தில் சென்றவர்களே கழட்டி விட்டார்களா அல்லது தவறி விழுந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x