Published : 04 Jul 2019 12:00 AM
Last Updated : 04 Jul 2019 12:00 AM
தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் துறையின் கீழ் தோட்டக்கலைத் துறை செயல்பட்டு வந்தது. 1979-ம் ஆண்டு முதல் தோட்டக்கலைத் துறை தனித்துறையாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது 12 லட்சம் ஹெக்டேரில் காய்கறி, பழம், மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இவை உள்நாடு தவிர வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆவதால் விவசாயிகளுக்கும், அரசுக்கும் அதிக வருவாய் ஈட்டித்தரும் முக்கியமான துறையாக தோட்டக்கலைத் துறை திகழ்கிறது.
வேளாண் துறையுடன் ஒப்பிடும்போது அதன் சாகுபடிப் பரப்பில், 15%தான் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால், உற்பத்திப் பொருட்கள் மதிப்பீட்டில், விற்பனை வர்த்தகத்தில் வேளாண் துறைக்கு இணையாகவே தோட்டக்கலை உள்ளது.
தோட்டக்கலைத் துறையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் அதை விவசாயிகளிடம் கொண்டு போய்ச் சேர்க்கவும் இணை இயக்குநர், துணை இயக்குநர் பதவிகள் முக்கியமானவை. ஆனால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரியில் மட்டுமே 2 இணை இயக்குநர் பணியிடங்கள் உள்ளன. பிற மாவட்டங்களில் துணை இயக்குநர் அளவிலேயே தோட்டக்கலைத் துறை செயல்படுகிறது.
மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 18-ல் துணை இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு துணை இயக்குநரும் அருகில் உள்ள மாவட்டங்களையும் சேர்த்துக் கவனிக்கிறார்கள். அதனால், அவர்களால் இந்த மாவட்டங்களில் நடக்கும் அரசு விழாக்கள், அன்றாட நிர்வாகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது. வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே மாவட்டங்களில் இருக்க முடிகிறது.
பொருளாதார செலவினங்கள்
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை பொருளாதார செலவினங்கள் ஏற்படுகின்றன. இந்த நிர்வாகப்பணிகளை குறைந்த பணியாளர்களைக் கொண்டு செய்ய முடியவில்லை.
மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் பொறுப்புகளை வகிக்கும் அதிகாரிகளுக்கே தோட்டக்கலைத்துறை தனித்துறை என்பது தெரியவில்லை. வேளாண்துறையின் ஓர் அங்கமாகவே நினைத்துக் கொள்கின்றனர். ஆட்சியர்கள் வேளாண்துறையின் இணை இயக்குநருக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் எங்களுக்குத் தெரிவிப்பதில்லை. இதுபோன்ற இடர்ப்பாடுகளால் மக்கள் நலத்திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதில் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன.
கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், ஆந்திர மாநிலங்களில் தோட்டக்கலைத் துறைக்கு தனி அமைச்சகம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒரு இணை இயக்குநர் பணியிடத்தைக் கூட உருவாக்க முடியவில்லை. துணை இயக்குநர் பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை. தோட்டக்கலைத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பி இணை இயக்குநர் பணியிடத்தை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும், எதிர்காலத்தில் தனி அமைச்சகம் உருவாக்கினால் இத்துறை மேம்பாடு அடைவதோடு விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றமும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT