Published : 10 Jul 2019 03:29 PM
Last Updated : 10 Jul 2019 03:29 PM
நடப்பு கல்வி ஆண்டிலேயே ராமேசுவரத்தில் கலாம் அரசு கல்லூரி துவக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களையெல்லாம் கனவு காணுங்கள் என இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்த கனவு நாயகன் அப்துல் கலாம் தான் பணி ஓய்வு பெற்றதும் தனது சொந்த ஊரான ராமேசுவரத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என தனது அக்னி சிறகுகள் சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராமேசுவரம் தீவில் மட்டும் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 12ம் வகுப்பை முடித்து 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறுகிறார்கள். ராமேசுவரம் மாணவர்கள் மேற்கல்விக்காக தீவை விட்டு ராமநாதபுரம், மதுரை, திருச்சிக்குத்தான் கல்லூரி பயில செல்ல வேண்டியுள்ளது. ஆனால் மீனவர்கள் அதிகமாக வாழும் ராமேசுவரத்தில் ஒரு கல்லூரி கூட இல்லாதால் அநேகமான மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புடன் நிறுத்திக் கொள்கிறார்கள்.
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவரது ஆவலுக்கேற்ப அவர் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் அவர் பெயராலேயே அரசு ஒரு கல்லூரியை உருவாக்க வேண்டும் என்பது ராமேசுவரம் மக்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 'ராமேசுவரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நடப்பாண்டிலேயே நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் ராமேசுவரத்தில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டு முதல் கட்டமாக பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி. கணிதம், பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் ஆகிய 5 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கல்லூரி திறக்கப்படவில்லை.
இந்நிலையில் ராமேசுவரம் வட்டாச்சியரிடம் ராமேசுவரம் தீவு மக்கள் நலபேரவை சார்பாக நேற்று மனு அளிக்கப்பட்டது.
துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் நடப்பாண்டிலேயே அப்துல் கலாம் பெயரில் கல்லூரி ராமேசுவரத்தில் துவங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை நம்பி வெளியூர் கல்லூரிகளுக்கு செல்லாமல் பல மாணவர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். எனவே கல்லூரியை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT