Published : 09 Jul 2019 07:29 AM
Last Updated : 09 Jul 2019 07:29 AM
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலர்களை இடமாற்றம் செய்யும் அரசின் முடிவுக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. பயிர்க்கடன், நுண்நீர்பாசனம், நில மேம்பாடு, கறவை மாடுகள் உள்ளிட்டவற்றுக்கு கடன் வழங்கப்படுகிறது. 4,407 சங்கங்களில் இ-சேவை மையங்களும், 2,104 சங்கங்களில் வேளாண் சேவை மையங்களும் செயல்படுகின்றன.
இச்சங்கங்களில் ‘ஊழியர்களின் முறைகேடு, கடன் தள்ளுபடி தொகைக்கான மானியத்தை அரசு வழங்காதது, கடனைத் திருப்பிச் செலுத்தாதது போன்ற காரணங்களால் பெரும்பாலான சங்கங்கள் நலிவடைந்தன. மேலும் பல சங்கங்களில் பயிர்க் காப்பீட்டில்கூட முறைகேடு நடந்துள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. மேலும், சங்கச் செயலாளர்கள், நியமன நாளில் இருந்து ஒரே சங்கத்தில் பணிபுரிந்து வருவதால் அதிக அளவில் முறைகேடு நடக்கிறது' என்று கூட்டுறவு அதிகாரிகள் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது.
இதையடுத்து கூட்டுறவு சங்கச் செயலர்களை இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மாநிலதொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியது:செயலர்களின் ஊதியம் சங்கத்துக்குச் சங்கம் மாறுபடும். நலிவடைந்த சங்கங்களில் பணிபுரியும் செயலர்கள் பல ஆண்டுகளாக ஊதியம் பெறாமல் உள்ளனர். அந்தச் சங்கங்களுக்கு நல்ல நிலையில் இருக்கும் சங்கங்களின் செயலர்களை மாற்றும்போது அவர்கள் ஊதியம் பெறமுடியாது.
மேலும் ஒரு சங்கம் நல்ல நிலையில் வருவதற்கு அந்தச் செயலரே முக்கியக் காரணம். இதனால் செயலர்களை இடமாறுதல் செய்தால் நல்ல நிலையில் இருக்கும் சங்கங்களும் நலிவடையும்.
அதற்கு தவறு செய்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தச் செயலர்களை இடமாற்றம் செய்வது சங்கங்களின் நிலைத்தன்மையைப் பாதிக்கும். சங்கக் கணக்குகளை பெயரளவுக்குத்தான் ஆய்வு செய்கின்றனர்.
எனவே, தணிக்கையைத் தீவிரப்படுத்தினால் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த முடியும். இடமாற்றம் செய்வது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT