Published : 04 Jul 2019 04:24 PM
Last Updated : 04 Jul 2019 04:24 PM

உதயநிதி நியமனம் தாமதமான அறிவிப்பு: வெள்ளக்கோவில் சாமிநாதன் பேட்டி

உதயநிதியின் நியமனம் தாமதமான அறிவிப்பு என்கிறார் முன்னாள் இளைஞரணிச் செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.

திமுகவின் முக்கியப் பதவிகளில் ஒன்றான இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் இருந்த அப்பதவி, 2017-ல் வெள்ளக்கோவில் சாமிநாதன் வசமானது. கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் சாமிநாதன்.

இளைஞர் அணி துணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவருக்கு 2017-ல் இளைஞர் அணியின் புதிய செயலாளர் என்ற மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொறுப்பில் இருந்து மு.பெ.சாமிநாதன் விடுவிக்கப்பட்டு, உதயநிதி பொறுப்பேற்றிருக்கிறார்.

இதுகுறித்து திமுகவின் முன்னாள் இளைஞரணிச் செயலாளர் மு.பெ.சாமிநாதனிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் பேசினோம்.

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

''மகிழ்ச்சியாக உள்ளது. இது தாமதமான அறிவிப்புதான். இன்னும் ஒரு மாதம் முன்பே அவர் பதவியேற்றிருக்க வேண்டும்.

எதனால் உங்கள் பதவியை ராஜினாமா செய்தீர்கள்?

உதயநிதி இளைஞரணிச் செயலாளராக வேண்டும் என்பதற்காகவே எனது பதவியை ராஜினாமா செய்தேன். இதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் வரவேண்டும் என்று விருப்பப்பட்டேன்.

இதனால் திமுக மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு அதிகமாகாதா?

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விமர்சனங்களை எழுப்பிக்கொண்டேதான் இருப்பார்கள். நாங்கள் அதில் கவனம் செலுத்தாமல் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறை காட்டுகிறோம்.

உதயநிதியும் இந்த இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. கழகத்  தோழர்கள் பெரும்பாலானோர் உதயநிதி வருவதை ஆதரித்தனர்.

நீங்கள் இளைஞர் அணியின் செயலாளராக என்னென்ன பணிகளை முன்னெடுத்தீர்கள்?

மாதந்தோறும் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெறும். தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பை நடத்தினோம். ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1 அன்று, இளைஞர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று ரத்த தானம் செய்வது, மரக்கன்று நடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோம். உறுப்பினர்களின் அட்டைகளைப் புதுப்பித்தோம். ஊராட்சி, வட்ட அளவில் கட்சியைக் கொண்டுபோய் சேர்த்தோம்.

கட்சியின் விழாக்களைக் கொண்டாடுவது, மக்களை நேரில் சந்தித்து, தேவைப்படும் உதவிகளைச் செய்வது, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது ஆகியவற்றைச் செய்திருக்கிறோம். தமிழக வரலாறு, தலைவர்களின் வரலாறு, தமிழ் மொழி கடந்துவந்த பாதை உள்ளிட்ட தகவல்களை மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்த்துள்ளோம்.

ஸ்டாலின் செய்த பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்தோம். அதேபோல உதயநிதியும் அதைப் பின்பற்றுவார் என்று நம்புகிறேன். அவர் செய்யவேண்டும், அப்படிச் செய்தால்தான் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இளைஞரணிச் செயலாளராகப் பதவியேற்ற உங்களுக்கு கட்சியினரே சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்பட்டதே?

நல்ல முறையில் நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கினர். ஒருசில இடங்களில் ஒருசில குறைகள் இருக்கலாம். அது ஒன்றிரண்டு இருக்கத்தானே செய்யும். மாநகராட்சி அளவிலான நிர்வாகிகள், நகராட்சி நிர்வாகிகளோடும், அவர் மாவட்ட, வட்ட அளவிலும் இணைந்து செயல்பட்டனர். எங்களின் வேலை கண்காணித்து, அவர்களை உற்சாகப்படுத்தி, வேகப்படுத்துவதுதான். அதை சிறப்பாகவே செய்தேன்.

உதயநிதியின் சினிமா பிம்பம் மக்களிடத்தில் எடுபடுமா?

நிச்சயமாக, மக்களுக்கு அறிமுகமான நபராக உதயநிதி உள்ளதால், கட்சி வளர்ச்சிக்கு பயனுள்ளதாகவே இருக்கும். தனது பொறுப்பில் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்புகிறேன்.

உதயநிதிக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

இளைஞரணிச் செயலாளராகி உள்ள உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருக்குத் தொடர்ந்து எங்களுடைய ஒத்துழைப்பை அளிப்போம். தேவைப்பட்டால் ஆலோசனைகளையும் வழங்குவோம். கட்சியினர் என்றும் அவருக்குத் துணை நின்று செயல்படுவோம்''.

இவ்வாறு தெரிவித்தார் வெள்ளக்கோவில் சாமிநாதன்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x