Last Updated : 06 Jul, 2019 07:28 AM

 

Published : 06 Jul 2019 07:28 AM
Last Updated : 06 Jul 2019 07:28 AM

கற்றல் திறனை மேம்படுத்த பொம்மலாட்டம் மூலம் பாடம்; புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியையின் புது முயற்சி

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பொம்மலாட்டம் மூலம் பாடம் நடத்துகிறார் புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியை ரேவதி.

நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இன்றைய மாணவர்கள் உள்ளனர். தொழில்நுட்ப பொழுதுபோக்கு அம்சங்களில் அவர்களின் கவனம்ஈர்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியான  சூழலில் கற்பித்தலுக்காக ஆசிரியர்கள் புதுப்புது உத்திகளை கையாண்டு வருகின்றனர். அப்படி ஒரு புது முயற்சியை கையாண்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் புதுச்சேரி -  பிள்ளையார்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை ரேவதி.

சிறிய திரையின் பின்னால் அமர்ந்து, உரத்த குரலில் பேசி பொம்மலாட்டம் மூலம் இவர் நடத்தும் பாடத்தை மாணவர்கள்  எளிதில் மறப்பதில்லை.  மாணவர்களின் கவனச் சிதறலை மாற்ற, கற்கும் திறனை மேம்படுத்த, எளிதாக புரிந்துகொள்ள இந்த பொம்மலாட்டத்தின்போது பின்னணி இசை கோர்வைகளை இணைத்து அனைத்து மாணவர்களும் ரசிக்கும் வகையில்  செய்கிறார்.

‘ஷேடோ பப்பட்', ‘டாய் பப்பட்' , ‘ஸ்டிக் பப்பட்', ‘பிங்கர் பப்பட்', ‘ஹேண்ட் பப்பட்'  என வகை வகையான பொம்மைகளை பயன்படுத்தி கற்பிக்கிறார். இந்த பொம்மைகளை ஆசிரியை ரேவதிதானே உருவாக்கி மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறார்.

இதுபற்றி ஆசிரியை ரேவதி கூறும்போது, "2012-ல் காரைக்கால் அகலங்கன் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது. அப்போது புதுச்சேரி பள்ளிகல்வித்துறை மூலம் அரசுப் பள்ளிமாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்திட  ‘மிஷன்-3' என்றமுன்னெடுப்பு திட்டம் கொண்டு வரப்பட்டு, ஆசிரியர்கள் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை கையாள ஊக்குவிக்கப்பட்டது.

அப்போது, குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகளை கொண்டு பொம்மலாட்டம் வாயிலாக பாடத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனக்கு பொம்மைகள் செய்வதில் ஆர்வம் அதிகம்.

கடந்த 7 ஆண்டுகளாக இந்த முறையை நான் கையாண்டு வருகிறேன். 2018-ல்ஆசிரியர்களுக்கான காட்சிப் பொருள் போட்டியில் பங்கேற்றுமாநில அளவில் பரிசு பெற்றேன். தேவையான பொம்மைகளை நானே செய்வேன். மாணவர்களுக்கும் பொம்மை உருவாக்கக் கற்று கொடுக்கிறேன்.

பொம்மலாட்டம் மூலம் பாடங்களை கற்பிக்கும்போது மாணவர்கள் கவனச் சிதறல் ஏற்படாமல் அதீத கவனத்துடனும், மகிழ்ச்சியுடனும் பாடங்களை கற்கின்றனர். அவர்களுடைய கற்றல் திறன் மேம்படுகிறது பொம்மலாட்டம் மூலம்ஒரு எளிய கதையைச் சொல்வதுபோல, ஒரு பாடத்தை ஒருமுறை எடுத்தாலே போதும். மாணவர்கள் அப்படியே ஞாபகம் வைத்துக் கொள்கின்றனர்'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், அறிவியல், ஓவியம், மாறுவேடம் உள்ளிட்ட பல போட்டிகளிலும் கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் மாணவர்கள் பங்கேற்று 30-க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றுள்ளனர் என்று தங்கள் பள்ளி மாணவர்கள் குறித்து பெருமிதம் கொள்கிறார் ஆசிரியை ரேவதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x