Published : 02 Jul 2019 12:00 AM
Last Updated : 02 Jul 2019 12:00 AM

நடப்பு காலாண்டில் தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 33% குறைப்பு: கிராம மக்கள் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

நடப்பு காலாண்டில் தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டில் 33 சதவீதத்தை மத்திய அரசு குறைத்துவிட்டது. இதனால், கிராமப்புற மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில், மாநில உணவுப் பொருள் வழங்கல் துறையின் உரிமம் பெற்ற மண்ணெண்ணெய் டீலர்கள், மத்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கின்றனர். நடப்பு நிதி ஆண்டில் முதல் காலாண்டுக்கு தமிழகத்துக்கு 48,444 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்பட்ட நிலையில், 2-ம் காலாண்டுக்கு (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) 32,292 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மண்ணெண்ணெய் மொத்த வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.குப்புசாமி `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: 2017-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் மண்ணெண்ணெய் தேவை 3 மாதங்களுக்கு 1.50 லட்சம் கிலோ லிட்டராக இருந்தது. ஆனால், 81 ஆயிரம் கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், 2017 ஏப்ரலில் 51 ஆயிரம் கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.

பல மாநிலங்களிலும் இந்தப் பிரச்சினை இருப்பதால் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றப் போவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதன்படி 2018-ல் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற வழக்கு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை படிப்படியாக குறைத்து, நடப்பு நிதி ஆண்டில் முதல் காலாண்டுக்கு 48,444 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்தது. நடப்பு ஆண்டில் அதிலும்33 சதவீதத்தைக் குறைத்துவிட்டது. மொத்தத்தில் 20 சதவீத மண்ணெண்ணெய் மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அதிக அளவில் போலி ரேஷன் கார்டுகள் இருப்பதாகவும், வெளி மார்க்கெட்டில் மண்ணெண்ணெய் விற்கப்படுவதாகவும், இதைத் தடுக்கவே மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் குறைத்ததாகவும் மத்திய அரசு தெரிவிக்கிறது. இலவச காஸ் விநியோகத் திட்டம் பரவலாக அமல்படுத்தப்படுவதால், இந்த ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பேரிடரின்போது...

இலவச காஸ் விநியோகத்தைப் பொறுத்தவரை, ஒரு சிலிண்டர்தான் இலவசம். அதற்குப் பிறகு விலை கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும். இதனால், மீண்டும் மண்ணெண்ணெய்க்கு மாறுகின்றனர். கிராமப்புறப் பகுதிகள், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் மண்ணெண்ணெய் பயன்பாடு உள்ளது. மழை, புயல் உள்ளிட்ட பேரிடர்களின்போது மண்ணெண்ணெய் அடுப்புகள்தான் உதவின. இந்த சூழலில், மண்ணெண்ணெய் விநியோகத்தை தொடர்ந்து குறைத்து வருவது, கிராமப்புற மக்களை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்துக்கு உரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பி வருகிறது. நடப்புநிதி ஆண்டில் 2-வது காலாண்டுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதம் குறைத்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளோம். இருக்கும் மண்ணெண்ணெயை கொண்டு, விநியோகம் செய்து வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x