Published : 10 Jul 2019 09:55 AM
Last Updated : 10 Jul 2019 09:55 AM

நிர்வாகிகள் கட்சி தாவுவதால் குழப்பம்: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடாத அமமுக

வேலூர் மக்களவைத் தேர்தலுக்குள் அமமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் அதிமுக, திமுகவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்றும் இதன் காரணமாகவே, வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தினகரன் அறிவித்துள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.

ஆக.5-ம் தேதி நடைபெற உள்ள வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே வேலூர் மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிட்டார். அவரே மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் அமமுகவினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுதொடர்பாக அமமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘கட்சியில் உள்ள சில முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சி தாவும் எண்ணத்தில் உள்ளனர். ஏற்கெனவே முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன், திமுகவில் இணைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து, மேலும் 2 முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியம் (ஆம்பூர்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்) ஆகியோரின் முடிவு குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள முடியவில்லை. கட்சிப் பணிகளில் இருந்து தள்ளியே இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு 8 ஆயிரம் வாக்குகளைதான் பெற்றுள்ளனர். தற்போதைய நிலையில் நகர, ஒன்றிய அளவிலான அமமுக நிர்வாகிகளை வளைக்க அதிமுக முயன்று வருகிறது.

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேபோல், 37 மக்களவைத் தொகுதிகளில் வென்ற திமுகவும் இதே மனநிலையில்தான் உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமமுக நிர்வாகிகள் அதிமுக, திமுகவுக்கு சென்றால் அதை ஈடுசெய்ய கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

இந்தத் தேர்தலில் மீண்டும் பரிசுப்பெட்டி சின்னம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பரிசுப் பெட்டி சின்னத்தைப் பெற மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டும். பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் செலவு என பல காரணங்கள் குறித்து ஆலோசனை செய்ததில் தேர்தலை புறக்கணிப்பதே எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. அமமுகவில் இருந்து விலகிச் செல்பவர்கள் சென்ற பிறகே கட்சியை பலப்படுத்த முடியும். அமமுகவுக்கு இது முக்கியமான தேர்தலும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. அதை செய்ய வேண்டிய நேரமும் இதுதான்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x