Published : 07 Jul 2019 10:35 AM
Last Updated : 07 Jul 2019 10:35 AM
சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை இடி, மின்னலுடன் கூடிய வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழையின்றி, நீர்நிலைகள் வறண்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து சென்னை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குகூட தண்ணீர்பற்றாக்குறையால் திண்டாடினார்கள். இந்நிலையில் கடந்த வாரம் வெப்பச்சலனத்தால் ஆங்காங்கே மழைபெய்து குளிர்வித்தது. ஆனாலும் அந்த மழை சென்னையில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையையும், நிலத்தடி நீர் உயர்த்தவும் போதுமானதாக இல்லை. 5 நாட்கள்வரை விட்டு விட்டு சென்னையில் ஆங்காங்கே பெய்த மழை பின்னர் நின்றுவிட்டது.
இந்நிலையில், வரும் 9-ம் தேதி முதல் மீண்டும் வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் "இந்து தமிழ்திசை இணையதளம் "பிரிவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடுத்த வாரத்தில் இருந்து 9-ம் தேதியில் இருந்தோ அல்லது அதற்கு முன்பிருந்தே சென்னையிலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், கடற்கரை மாவட்டங்களிலும் தொடர்ந்து குறைந்தபட்சம் 6 நாட்களுக்கு அதாவது 15-ம் தேதிவரை வரை வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு உண்டு.
"பிரேக்-மான்சூன்" எனப்படும் காரணியால் இந்த மழை ஏற்படுகிறது. அதாவது வெப்பமண்டல குறைந்தகாற்றழுத்த தாழ்வுநிலை நிலப்பகுதியில் இருந்து இமயமலைப்பகுதிக்கு நகர்ந்து அங்கிருந்த செயல்படத் தொடங்கும். இதனால் வடமாநிலங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த பிரக்-மான்சூன் காரணமாக தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யும். பொதுவாக பிரேக்-மான்சூன் எனும் விஷயம் இந்தியா முழுமைக்கும் நல்லதல்ல. ஆனால், இப்போதுள்ள நிலையில் தமிழகத்துக்கு நல்ல செய்திதான்.
இதன் மூலம் ஏற்படும் வெப்பச்சலன மழை சென்னைக்கு மட்டுமல்லாது, கடற்கரை மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் நல்ல மழையைக் கொடுக்கும். மாலை, அல்லது இரவுநேரத்தில் இடி,மின்னலுடன் கூடிய மழை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை பெய்ய வாய்ப்பு உண்டு.
கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் செம்டம்பர் மாதங்களில் இதுபோன்ற வெப்பச்சலன மழையால் வடதமிழகத்துக்கு நல்ல மழை கிடைத்தது .அதுபோன்ற மழையை எதிர்பார்க்கலாம்.
இந்த பிரேக்-மான்சூன் காலத்தில் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், டார்ஜ்லிங் போன்ற இமயமலை ஒட்டிய பகுதிகளில் மிக,மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதை வரும் நாட்களில் செய்திகளில் காணலாம்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழைபெய்யத் தொடங்கிவிட்டது. குறிப்பாக கேஆர்எஸ் அணை அமைந்திருக்கும் குடகு மலைப்பகுதி, ஹேமாவதி அணை அமைந்திருக்கும் சிக்மகளூர் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்துவரும் மழையால் கபினி அணைக்கும் நீர்வரத்து இருந்து வருகிறது. அடுத்துவரும் நாட்களில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்
வால்பாறை, சின்னக்கல்லார் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அடுத்துவரும் நாட்களில் நல்லமழைக்கு வாய்ப்பு உண்டு. இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான தேனி, பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகள், கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. வரும் நாட்களில் அங்கும் மழை அதிகரிக்கும்.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT