Published : 08 Jul 2019 02:53 PM
Last Updated : 08 Jul 2019 02:53 PM
வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பேராசிரியை நிர்மலாதேவி தியானத்தில் ஈடுபடுவது, சம்பந்தமில்லாமல் பேசுவது என வினோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 2018 ஏப்ரல் 16ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பாசமி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். திருவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது உதவிப் பேராசிரியர் முருகன் விடுப்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆய்வு மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜரானார். அதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி காயத்திரி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு தாமதமாக வந்த பேராசிரியை நிர்மலாதேவியின் நவடிக்கைகளில் மாற்றம் காணப்பட்டது. எப்போதும், ஸ்டைலாக நீதிமன்றத்திற்கு வரும் பேராசிரியை நிர்மலாதேவி இன்று சுடிதார் பேண்ட் அணிந்து அதற்கு மேல் சேலை கட்டியபடி வந்திருந்தார். அதோடு, நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற மறுத்து பல இடங்களில் அமர்ந்து கண்களை மூடி அவ்வப்போது தியானத்தில் ஈடுபட்டார்.
மேலும், தனக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்றும், தன்மீது குற்றம் சுமத்திய மாணவிகள் தூக்குப்போட்டு இறந்துவிட்டதாகவும் பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பில்லாமல் பேசினார்.
அமைதியாக நீதிமன்றத்திற்கு வந்த பேராசிரியை நிர்மலாதேவியின் இத்தகைய செயல்பாடுகள் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், வழக்கறிஞர்கள் சிலர் சமாதானம் செய்துவைத்து பேராசிரியை நிர்மலாதேவியை காரில் அனுப்பிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT