Published : 03 Jul 2019 12:00 AM
Last Updated : 03 Jul 2019 12:00 AM
மத்திய அரசின் முழு பட்ஜெட் வரும் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் தமிழக ரயில்வே திட்டங்கள் முக்கியத்துவம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் மீட்டர்கேஜ் பாதைகளை அகல பாதையாக மாற்றம் செய்தல், இருவழிப் பாதை பணிகள், மின்மயமாக்கல், புதிய இருப்பு பாதைகள் அமைத்தல், புதிய முனைய வசதிகள் ஏற்படுத்துதல், தற்போதுள்ள முனைய வசதிகளை விரிவுபடுத்துதல், அதிவேக ரயில்வே பாதைகள் அமைத்தல், புதிய ரயில்வே தொழிற்சாலைகள் அமைத்தல் என பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இருவழிப் பாதைகள்
தமிழகத்தில், தஞ்சாவூர் - திருச்சி, கன்னியாகுமரி – திருவனந்தபுரம், மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி, மணியாச்சி – நாகர்கோவில் ஆகிய வழித் தடங்களை, இருவழிப் பாதையாக்கும் பணி நடைபெறுகிறது.
இவை தவிர, தஞ்சாவூர் - விழுப்புரம், திண்டுக்கல் -ஈரோடு, திருச்சி - ஈரோடு, மதுரை - ராமேசுவரம், தஞ்சாவூர் - காரைக்கால் ஆகிய முக்கிய தடங்களை இருவழிப் பாதையாக்க வேண்டியுள்ளது.
புதிய இருப்பு பாதைகள்
தமிழகத்தில் 3,846 கி.மீ. நீள இருப்பு பாதைகள் உள்ளன. மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புக்கோட்டை), திண்டிவனம் - செஞ்சி – திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திபட்டு – புத்தூர், ஈரோடு – பழநி, சென்னை - கடலூர் (வழி மாமல்லபுரம்), ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, மொரப்பூர் - தருமபுரி, ராமேசுவரம் - தனுஷ்கோடி ஆகிய புதிய இருப்பு பாதை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் தொடங்கவில்லை.
வேளாங்கண்ணி – திருத்துறைபூண்டி, காரைக்கால் - பேரளம், திருத்துறைபூண்டி – அகஸ்தியம்பள்ளி, மன்னார்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, மதுரை – போடி ஆகிய வழித்தடங்களில், இன்னமும் ஆங்கிலேயர் கால மீட்டர் கேஜ் பாதைகளே உள்ளன. இவற்றை அகலப் பாதையாக மாற்றும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி. எட்வர்ட் ஜெனி கூறியதாவது:கன்னியாகுமரி மற்றும் ராமேசுவரத்திலிருந்து வாரணாசி, திருப்பதி, ஹரித்வார், திருத்தணி, சீரடி, அமிர்தசரஸ், துவாரகா, தர்மசாலா, புவனேஸ்வர் போன்ற புனிதத் தலங்களுக்கு சென்னை வழியாக ரயில்களை இயக்க வேண்டும்.
தானியங்கி சிக்னல்
சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே மட்டுமே தானியங்கி சிக்னல் வசதி உள்ளது. மற்ற வழித் தடங்களில் நிலைய அதிகாரிகளே சிக்னலை கையாள்கின்றனர். இதனால், ரயில்களின் பயணநேரம் அதிகரிக்கிறது. ஆகவே, செங்கல்பட்டு - கன்னியாகுமரி, விழுப்புரம் - ராமேசுவரம், ஜோலார்பேட்டை - கோயம்புத்தூர் என அனைத்து வழித் தடங்களிலும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதியஅறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதுதொடர்பாக தமிழக எம்.பி.க்கள் ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதுடன் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்ப வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT