Published : 11 Jul 2019 09:59 AM
Last Updated : 11 Jul 2019 09:59 AM

மரம் நட்டு பிறந்த நாள் கொண்டாடும் மாணவர்கள்!

வேகமாக அழிந்து வரும் வனப் பரப்பு, பூமியின் சூழலை மாற்றி வருகிறது. இதனால், ஒவ்வொருவருமே மரம் நட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிறந்த நாளை, மரம் நடும் விழாவாகக் கொண்டாடி முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர் உதகை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை மாணவர்கள்.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலேயர் களால் முதன்முதலில் கட்டப்பட்ட கட்டிடம் ஸ்டோன் ஹவுஸ். அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் கோடைகால தலைமையகமாகச் செயல்பட்டு வந்த இக்கட்டிடத்தில் 1955-ல் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட ஏழை மக்களின் உயர் கல்வி கனவை நனவாக்கும் இக்கல்லூரி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது இங்கு  12-க்கும் அதிகமான துறைகள் உள்ளன.  4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயிலும் இக்கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். மலை மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கல்லூரி,

கல்வியில் மட்டுமின்றி, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, விளையாட்டு, கலைகள் என அனைத்திலும் சிறந்து விளங்க ஆசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஏறத்தாழ 65 ஆண்டுகளை கடந்த இந்தக் கல்லூரியில், மாணவர்களின் பிறந்த நாளை மரம் நடும் விழாவாக கொண்டாடும் புதிய கலாச்சாரத்தை தமிழ்த் துறை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.

“மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், மாணவர் சமுதாயத்தின் பங்களிப்பாக இந்த முயற்சி மேற்கொள்ளப்

படுகிறது. பிறந்த நாளை மேற்கத்திய முறையில் கொண்டாடும் முறையை மாற்றவும், எளிமையாக கொண்டாடும் வகையிலும் மரம் நடு விழா கொண்டாடப்படுகிறது” என்கிறார் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் போ.மணிவண்ணன்.

“அதிக விலை கொண்ட கேக் வெட்டுதல், சாக்லெட் வழங்குதல், பிறந்த நாள் வாழ்த்து அட்டை வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மரம் நடும் விழாவாக பிறந்த நாளைக் கொண்டாட முடிவு  செய்யப்பட்டது. தமிழ்த் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவி கீர்த்தியின் பிறந்த நாளையொட்டி, கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்டுவைக்கப்பட்டது” என்றார் அவர்.மாணவி கீர்த்தி, தனது பெயரில் வாங்கிய மரக்கன்றை கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் போ.மணிவண்ணன் ஆகியோரிடம் வழங்கினார். தமிழ்த் துறை மாணவர்களுடன், வன உயிரியல் துறை மாணவர்களும் இணைந்து மரம் நட்டுவைத்தனர்.

“இனி வரும் நாட்களில் பிறந்த நாள் கொண்டாடும் ஒவ்வொரு மாணவரும்  இதைப் பின்பற்றி,  இயற்கையின் நண்பர்களாக மாறி,  பசுமையை அதிகரிக்க வேண்டும். மாணவர்களின் பிறந்த நாள் பட்டியலை வெளியிட்டு, இதை உறுதிப்படுத்துவோம்” என்றார் கல்லூரிமுதல்வர் ஈஸ்வரமூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x