Published : 20 Nov 2014 10:45 AM
Last Updated : 20 Nov 2014 10:45 AM
வருங்காலங்களில் கட்டிட விபத்துகள் நிகழ்வதைத் தடுப்பதற்காக, அரசியல் குறுக்கீடு அற்ற அமலாக்கக் குழுவை அமைக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் நியமித்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கடந்த ஜூன் மாதம் இடிந்து விழுந்ததில் 60 பேர் உயிரிழந்தனர். சிஎம்டிஏ அளித்த கட்டிட ஒப்புதலுக்கு மாறாக கட்டப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதனை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 23-ம் தேதிக்குள் இது தொடர்பான விளக்க அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் சென்னையில் விதிமீறிய கட்டிடங்கள் மற்றும் வரன்முறைப்படுத்துதல் திட்டத் தின்கீழ் வரும் பிரச்சினைகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் சிஎம்டிஏ-வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சிஎம்டிஏ தலைமை அலுவலகத்தில், கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது.
2008 மாஸ்டர் பிளான்
இதில், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உயர் நீதிமன்றம் நியமித்த உறுப்பினர்கள், சிஎம்டிஏ அதிகாரிகள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
சென்னை பெருநகர எல்லைப் பகுதியில் கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பாக 2008-ல் உருவாக்கப்பட்ட மாஸ்டர் பிளான் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றியிருந்தால் பெரும்பாலான கட்டிட விதிமீறல்களைத் தவிர்த்தி ருக்கலாம் என சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
அரசியல் குறுக்கீடு
எனினும், மவுலிவாக்கம் சம்பவத்தில் கட்டிட வரைபடத் துக்கான அனுமதி முறையாக வழங்கப்பட்டிருந்தாலும், கட்டு மானத்தின்போது விதிகள் மீறப்பட்டதால் பெரும் விபத்து நேரிட்டது.
அதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க, மாநகராட்சி ஆணையர் கண்காணிப்பில் அரசியல் தலையீடு இல்லாத ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
மேலும், அந்த அமைப்பினர் கட்டுமானம் நடக்கும் இடங்களை அடிக்கடி சோதனையிட்டால்தான் விதிமீறல் செய்வோருக்கு பயம் இருக்கும் என்பதால் அதில் ஒரு காவல்துறை அதிகாரியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
விதிமீறிய கட்டிடங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 23-ம் தேதி ஒரு அறிக்கையை அரசு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு முன்பாக, கட்டிட கட்டுமானத்தின்போது சென்று சோதனை செய்யக்கூடிய அமலாக்கக்குழு அமைப்பது தொடர்பான விளக்கத்தை கண்காணிப்புக் குழுவின் முன் அரசு வைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
வரன்முறைத் திட்ட குழப்பம்
இதுதவிர, விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை முறைப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட வரன்முறைத் திட்டத்தில் 2007 வரை பெறப்பட்ட மனுக்களை பரிசீலிப்பதா அல்லது 1999-ம் ஆண்டு மட்டும் பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலிப்பதா என்ற குழப்பம் உள்ளது. அதனை உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்து, அடுத்த கூட்டத்துக்குள் குழப்பத்தை தீர்க்க வேண்டும் என்று குழுவில் உள்ளவர்கள் வலியுறுத்தினர்.
இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT