Published : 30 Jun 2019 11:48 AM
Last Updated : 30 Jun 2019 11:48 AM
டிடிவி.தினகரனை விமர்சித்து பேசிய ஆடியோ வெளியான நிலையில் அமமுகவுக்கு திரும்ப முடியாமலும், அதிமுகவில் உடனடியாக சேர முடியாமலும் தவித்த தங்கதமிழ்செல்வனை திமுக சிவப்பு கம்பளம் விரித்து இணைத்துக் கொண்டதின் பின்னணியில் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்குஎதிராக கட்சியை பலப்படுத்தும் திட்டம் உள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கரூர் செந்தில்பாலாஜியை தொடர்ந்து அமமுகவில் இருந்து தங்கதமிழ்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். டிடிவி.தினகரனுடன் மோதல் ஏற்பட்டதும் அதிமுகவில் இணைவதற்காக அவர் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முதல்வர் கே.பழனிசாமி சம்மதம் தெரிவித்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்து முட்டுக்கட்டை போட்டதால் அவரால் அதிமுகவில் சேர முடியவில்லை.
தங்கதமிழ்செல்வன், 2001ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக நியமிக்கப்பட்டவர். ஆனால், தேர்தலில் போட்டியிட ஜெயலிதாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் மாற்று வேட்பாளராக இருந்த தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டு அந்த தொகுதியில் வெற்றிப்பெற்றார்.
அதன்பின் ஜெயலிதாவுக்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு பரிசாக மாநிலங்களவை எம்பி பதவியை ஜெயலலிதா அவருக்கு வழங்கி கவுரவித்தார்.
ஜெயலலிதா இருந்தபோதே தேனி மாவட்ட அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம், கட்சியிலும், ஆட்சியிலும் ஜெயலலிதாவுக்கு அடுத்து இடத்தில் முக்கிய நபராக இருந்தார். ஆனாலும், ஜெயலலிதாவை மீறி தங்கதமிழ்செல்வனை ஓ.பன்னீர்செல்வத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இப்படி அதிமுகவில் அவருக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால், அவரோ ஓ.பன்னீர்செல்வம் விதித்த நிபந்தனைகளை ஏற்று அதிமுகவில் சேர்ந்தால் அவரால் தன்னுடைய அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் திமுகவில் சேர்ந்துள்ளார்.
அவர் எடுத்துள்ள இந்த எதிர்துருமான அரசியல் நிலைபாடு அவருக்கும், திமுகவுக்கும் பலன் அளிக்குமா? என்ற அரசியல் கணக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தெரியும்.
தங்கதமிழ்செல்வனை ஒரு கட்டத்தில் அமமுகவில் டிடிவி.தினகரன் கட்டம் கட்டியதால் அவர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்த ஆடியோ வெளியானதால் அவர் அதிமுகவில் உடனடியாக சேர முடியாமலும், அமமுகவுக்கு திரும்ப முடியாமலும் தவித்தார்.
அந்த சூழ்நிலையிலும் தங்கதமிழ்செல்வனை திமுக சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. ஏற்கனவே தேனி மாவட்டத்தில் திமுகவில் கம்பம் செல்வேந்திரன், மூக்கையா போன்ற முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், அவர்கள் செயல்பாடுகளில் கட்சித் தலைமைக்கு திருப்தியில்லை என்று கூறப்படுகிறது.
அதனாலே, தங்கதமிழ்செல்வனை சேர்த்துக் கொண்டதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘தங்கதமிழ்செல்வன், துணிச்சலான அரசியல்வாதி. அமமுகவில் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அரசியல் செய்ததால் தமிழகம் அறிந்த முக்கிய நபரானார். அவரது வருகை தேனி மாவட்ட திமுகவுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கால தேர்தல் வரலாற்றை பார்க்கும்போது தேனி மாவட்டம் அதிமுகவுக்கு செல்வாக்கான மாவட்டமாகவே உள்ளது. அமமுக வேட்பாளராக தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டதால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவார் என்று நினைத்தபோது தமிழகத்திலே தேனியில் மட்டும் அதிமுக வெற்றிப்பெற்றது.
அதனால், அந்த மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவும், ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அரசியல் செய்யவும் திமுகவுக்கு ஒரு வலுவான நிர்வாகி தேவை என்று நினைத்தது. அதன் அடிப்படையிலே தங்கதமிழ்செல்வனை, திமுக மேலிடம் கட்சியில் இணைத்துக் கொண்டது. இந்த இணைப்பு திமுகவால் தங்கதமிழ்செல்வனுக்கும், அவரால் திமுகவுக்கும் பலன் அளிக்கும், ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT