Published : 30 Jun 2019 08:51 AM
Last Updated : 30 Jun 2019 08:51 AM
தாகத்துக்கு கொடுக்குற தண்ணிக்கு காசு வாங்கக் கூடாது. எங்களுடைய வழக்கத்துல தண்ணீர் விக்குறது பாவம்” என்கிறார் ரமணி என்கிற சுப்ரமணியம். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள உபதலையைச் சேர்ந்த இவர், 10 ஆண்டுகளாக கிராமவாசிகளுக்கு, தனது சொந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் கொடுக்கிறார்.
தென்னிந்தியாவின் தண்ணீர்த் தொட்டி என்று பெருமையுடன் அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், இன்று குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, உபதலையை ஒட்டியுள்ள குன்னூர் நகராட்சியில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுவதால், மக்கள் நீருக்காக அல்லாடுகின்றனர்.
10 ஆண்டுகளாக பற்றாக்குறை...
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாகவே கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குறிப்பாக, குன்னூர் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 6 மாதங்களுக்கு, போதுமான குடிநீர் கிடைக்காமல் அல்லாடுகின்றனர்.
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நகருக்கான குடிநீர் ஆதாரம் ரேலியா அணை. மொத்தம் 43.60 அடி உயரம் கொண்ட இந்த அணை, 1930-ல் 25,000 பேரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது. தற்போது குன்னூர் மக்கள் தொகை 4 மடங்காகிவிட்டது. பந்துமி, ஜிம்கானா, கரடிபள்ளம் உள்ளிட்ட நீராதாரங்கள் மூலம் தேவையை சமாளிக்கின்றனர்.
வாரம் இருமுறை விநியோகிக்கப்படும் தண்ணீர், மழை பொய்த்து விட்டால், வாரம் ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும். வறட்சிக் காலத்தில் மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யும் நிலை உள்ளது.
கரன்சி குடிநீர் திட்டம்!
குன்னூர் நகரின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, கரன்சி கிராமத்தை ஒட்டியுள்ள வனப் பகுதியில் பாயும் காட்டாற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் வகையில் கரன்சி குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால், அது குன்னூர் நகருக்கு கைகொடுக்கவில்லை. 2011-ல்
அதிமுக அரசு எமரால்டு அணை யிலிருந்து குடிநீர் வழங்க புதிய திட்டத்தை அறிவித்தது.தமிழ்நாடு வடிகால் வாரியம் மூலம் எமரால்டு அணையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய்கள் அமைத்து, தினமும் 116 லட்சம் லிட்டர் தண்ணீரை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில், குன்னூர் நகராட்சி, முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி மற்றும் பாஸ்டியர் ஆய்வுக்களமும் பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டு, ரூ.95.38 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டு இழுபறிக்குப் பின்னர், தற்போது எமரால்டு அணையிலிருந்து குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில், குடிநீர்ப் பஞ்சத்தை சாதகமாக்கிக்கொண்ட சிலர், சட்டத்துக்குப் புறம்பாகவும், சுகாதாரமற்ற முறையிலும் குடிநீர் விற்பனையில் ஈடுபட்டு, அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இவ்வாறு தண்ணீரை விற்று லாபம் சம்பாதிக்கும் மக்களிடையே, தண்ணீர் தானம் செய்து வருகிறார் ரமணி (எ) சுப்பிரமணியம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ரமணியிடம் பேசினோம்.
தினமும் 2,000 லிட்டர் நீர்...
“என் தந்தை தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். நான் பிறந்தபோது, உபதலை கிராமத்தில் குடியேறினர். எனது மனைவி ஒய்வுபெற்ற அஞ்சல் அலுவலர். எங்கள் வீட்டில் 56 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. அதிலிருந்து தினமும் 2,000 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. மக்களுக்கு உதவும் வகையில் தினமும் 70 குடும்பங்களுக்கு கிணற்று நீரை வழங்குகிறோம். தண்ணீரை தானமாகத்தான் வழங்க வேண்டும். விற்கக் கூடாது.
சென்னையில் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சம் வேதனையளிக்கிறது. இந்த நிலை நீலகிரிக்கும் வரலாம்.எனவே, தண்ணீரை சேமிப்பதுடன், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
தினமும் மாலை 5 மணிக்கு மோட்டாரை இயக்கி, கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து, குழாய் மூலம் விநியோகிக்கிறார் இவர். தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்தி லாபம் பார்க்கத் துடிப்பவர்கள் மத்தியில், கடந்த 10 ஆண்டுகளாக தினமும் மக்களுக்கு தண்ணீர் தானம் செய்து வரும் ரமணியை மாமணி என்றே போற்றுகின்றனர் அப்பகுதி மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT