Published : 29 Jun 2019 12:07 PM
Last Updated : 29 Jun 2019 12:07 PM

ஒரே அரசு மருத்துவமனை மூன்று இடங்களில் செயல்படும் அவலம்: மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கடும் சிரமம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, இடநெருக்கடியில் மூன்று இடங்களில் செயல்படுகிறது. அதனால், நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

பவள விழா கண்ட பாரம்பரியமிக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இடநெருக்கடியில் செயல்படுகிறது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பிரதான வளாகத்தில் அமையாமல் ½ கி.மீ தொலைவில் உள்ள மருத்துவக்கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், விபத்து காய அவசர சிகிச்சைப்பிரிவு, மருத்துவமனை வளாகத்தில் இருந்து ½ கி.மீ., தொலைவில் அண்ணா பஸ்நிலையம் அருகே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எதிரே அமைந்துள்ளது.

விபத்து காய அவசர சிகிச்சைப்பிரிவுதான் ஒரு மருத்துவமனையின் முக்கிய சிகிச்சைப் பிரிவாக கருதப்படுகிறது. சாலை விபத்து, அடிதடி உள்ளிட்ட பல்வேறு எதிர்பாராத விபத்துகளில் காயம் அடைவோர் விபத்து சிகிச்சைப்பிரிவுக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 100 முதல் 200 பேர் வரை விபத்து காய சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த சிகிச்சைக்கு வருவோர் பெரும்பாலோனர் உயிருக்கு போராடும் நிலையிலே வருகின்றனர்.

இவர்களுக்கு உரிய உயர் சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட வேண்டும். இவர்களுடைய காயத்தில் வெறும் தலைக்காயம், எலும்பு முறிவு மட்டும் இருக்காது. அடிப்பட்டு வருகிறவர்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல்வேறு உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், விபத்து காய சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில்  எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு, தலைக்காய சிகிச்சைப்பிரிவு மற்றும் பொது அறுவை சிகிச்சைப்பிரிவுகள் மட்டுமே செயல்படுகிறது.

அதற்கான மருத்துவர்களே இங்கு உள்ளனர். மற்ற சிகிச்சைப்பிரிவுகளும், அதன் மருத்துவர்களும் பழைய கட்டிடத்தில் உள்ளனர். அதனால், எலும்பு முறிவு, தலைக்காயம் தவிர மற்றப்பிரச்சனைகளுக்கு பழைய கட்டிடத்தில் இருந்துதான் மருத்துவர்கள் அங்கிருந்துதான் வந்து நோயாளிகளை பார்க்க வேண்டிய உள்ளது.

ஏற்கணவே காது, மூக்கு, தொண்டை, இதயம் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட மற்ற அனைத்து சிகிச்சைப்பிரிவுகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.

அதனால், அந்த மருத்துவர்களால் புறநோயாளிகள், உள் நோயாளிகளையே முழுமையாக பார்க்க முடியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். அதனால், விபத்து காய அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்து அழைத்தாலும், அவர்களால் சரியான நேரத்திற்கு வரமுடியவில்லை.

அதனால், விபத்தில் காயம் அடையும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காவிட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘‘ஒரே வளாகத்தில் மருத்துவப்பிரிவு கட்டிடங்கள் இல்லாமல் மூன்று இடங்களில் அமைந்துள்ளதே இந்த பிரச்சனைக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணம்.

விபத்து காய சிகிச்சைப்பிரிவில் 24 மணி நேரமும் அனைத்து சிகிச்சைப்பிரிவு நிபுணர்கள் ஒரு குழு தயார்நிலையில் இருக்க வேண்டும், ’’ என்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பொதுஅறுவை சிகிச்சை, தலைக்காயம் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களே போதுமானதுதான்.

இவர்கள் 24 மணிநேரமும் இருப்பார்கள். விபத்தில் காயம் அடைவர்களுக்கு பெரும்பாலும் இந்த மருத்துவர்கள்தான் சிகிச்சை அளிக்க வேண்டியது வரும். அப்படியே மற்ற அவசர சிகிச்சை தேவைப்பட்டதால் பொதுஅறுவை சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் மேற்கொள்வார்கள், பழைய கட்டிடத்தில் இருந்து அழைத்ததும் மருத்துவர்கள் வந்துதான் செல்கிறார்கள், ’’ என்றனர். 

எம்ஆர்ஐ ஸ்கேன் அமையுமா?

விபத்து காய சிகிச்சைப்பிரிவில் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே மட்டுமே உள்ளது. நோயாளிகளை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பழைய கட்டிடத்திற்கு ஆம்புலன்ஸ்சில் கொண்டு செல்ல வேண்டிய உள்ளது.

அதனால், நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள், வலி வேதனையுடன் பழைய கட்டடிடத்திற்கு அழைத்து செல்ல வேண்டியது.

எம்ஆர்ஐ மட்டுமில்லாது அனைத்து சிகிச்சைக்குமான முக்கிய மருத்துவ கருவிகளை விபத்து காய சிகிச்சைப்பிரிவில் நிறுவ வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து மருத்துவ சிகிச்சைப்பிரிவும் ஒரே வளாகத்தில் அமைக்க வேண்டும்.

அதுவும் முடியாவிட்டால் ராஜாஜி அரசு மருத்துவமனையை அனைத்து நோயாளிகளும் எளிதாக வந்து செல்லக்கூடிய இடத்தில் புறநகர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x