Published : 13 Nov 2014 08:42 AM
Last Updated : 13 Nov 2014 08:42 AM

வகுப்பறையில் பிளஸ் 1 மாணவர் அடித்துக் கொலை: மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பயங்கரம்

திண்டுக்கல் அருகே வகுப்பறையில் பள்ளி மாணவர் களிடையே ஏற்பட்ட மோதலில், பிளஸ் 1 மாணவரை சக மாணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அருகே விளாம் பட்டியில் கள்ளர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் விளாம்பட்டி, எத்திலோடு, கொங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, கருத்தாண்டிப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். எத்திலோடு காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஆசைதம்பி மகன் வினோத்(16) பிளஸ் 1 படித்தார். நேற்று பகல் 11.30 மணிக்கு பள்ளியில் இடைவேளை விடப்பட்டுள்ளது.

வகுப்பறையில், ஆசிரியர் இல்லாததால் வினோத் மற்றும் சில மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவர் மீது, ஒருவர் நோட்டுப் புத்தகங்களை வீசியும், கைகளால் தாக்கியும் உள்ளனர். இதில் மூக்கில் ரத்தம் வந்து, மாணவர் வினோத் மயக்கமடைந்துள்ளார். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்கள், மயக்கம் அடைந்த வினோத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, நிலக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு ஆட்டோவில் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், வழி யிலேயே மாணவர் இறந்து விட்டார்.

45 நிமிடங்களாக வராத ஆம்புலன்ஸ்

மாணவர் வினோத் மயக்கம் அடைந்து 45 நிமிடம் வரை உயிருக்குப் போராடியுள்ளார். 108 ஆம்புலன்ஸுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்பு லன்ஸ் வர தாமதம் ஆனதால் ஆசிரியர்கள் ஆட்டோவில் மாண வரைக் கொண்டுச் சென்றுள்ளனர். உடனடி சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விளாம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், பிளஸ் 1 மாணவர்கள், தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, உதவி தலைமை ஆசிரியர் ஆண்டிச்சாமி, ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் பள்ளி இடைவேளை நேரத்தில் வினோத்தின் நோட்டு புத்தகத்தை உடன் படிக்கும் விளாம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சுந்தரபாண்டியன் கிழித்துள்ளார். வினோத் சுந்தரபாண்டியனை தாக்கினார். சுந்தரபாண்டியன் வினோத்தை கழுத்து, உயிர்நாடி பகுதியில் தாக்கியதில் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார் சுந்தரபாண்டியனிடம் விசாரித்து வருகின்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி கூறும்போது, ‘திண்டுக் கல்லில் பள்ளி கல்வித்துறை கண்காட்சி நடைபெற்றது. அதனால், நான் அங்கு புறப்பட்டுச் சென்றுவிட்டேன். தற்போது மாதத் தேர்வு நடக்கிறது. பிளஸ் 1 வகுப்புக்கு மதியம்தான் தேர்வு. அதனால், பிளஸ் 1 வகுப்பு மாணவ-மாணவிகளை தனித்தனி வகுப்பறையில் அமரவைத்து ஆசிரியர்கள் படிக்க வைத்துள்ளனர். அதுவரை எந்த சம்பவமும் நடக்கவில்லை. பகல் 11.30 மணிக்கு பள்ளி இடைவேளை நேரத்தில் ஆசிரியர் இல்லை.

அப்போது நோட்டுப் புத்த கத்தை கிழித்ததாக இறந்த வினோத்தும், சுந்தரபாண்டியனும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதில் வினோத் மயக்க மடைந்துள்ளார். அவரை மருத்துவனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடக்கவில்லை, எதிர்பாராத நிகழ்வுதான் என்றார்.

‘ஆசிரியர் - மாணவர் இடைவெளியே காரணம்’

மனநல மருத்துவர் ஏ.காட்சன் கூறியதாவது, ‘இளம்பருவத்தில் வீடு, பள்ளி, நண்பர்கள் வட்டாரத்தில் சரியான வழிகாட்டுதல், அரவணைப்பு, கண்காணிப்பு இல்லாதபட்சத்தில், மாணவர்கள் திசை மாறுகின்றனர். இந்தப் பருவத்தில் மாணவர்கள் தனக்கென்று குறிப்பிட்ட அரசியல் தலைவர், நடிகர், ஆசிரியர், சமுதாயத்தில் சிறந்தவர்களை முன்மாதிரியாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அந்த தேர்வு சரியான நபராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் மாணவர்களின் குணநலன்களும் அதற்கேற்றாற்போல மாறிவிடுகிறது. சக மாணவரே, மாணவரை அடித்துக் கொன்றார் என்றால், அந்த மாணவர்கள் வளர்ந்த, படிக்கும் பள்ளியின் சூழ்நிலை காரணமாக இருக்கலாம்.

சமீபகாலமாக ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே அதிகரித்துள்ள இடைவெளி மாணவர்களுடைய தவறான பழக்கவழக்கத்துக்கு முக்கியக் காரணமாகும். கற்றல்திறன் குறைபாடுள்ள மாணவர்கள், லேசான கிண்டல், கேலியைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத மனப்பக்குவம், இளம்வயதிலேயே போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, அதனால் ஏற்படும் மனநிலை மாறுவதும் இதுபோன்ற தவறான செயலுக்குக் காரணமாகிறது.

இதற்கு ஆசிரியர், பெற்றோர் மாணவர்களிடையே நெருங்கிப் பழகி, அவர்களது பழக்க, வழக்கங்களைக் கண்காணித்து தவறான பாதையில் சென்றுவிடாமல் திருத்த முயற்சிக்க வேண்டும். இவ்வாறு காட்சன் தெரிவித்தார்.

உறவினர்களிடம் சிக்கிய மாணவர்

இறந்த வினோத்தின் உடல் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அங்கு வினோத்தை தாக்கிய மாணவர் சுந்தரபாண்டியனை போலீஸார் அழைத்து வந்தனர். இதைப் பார்த்த வினோத்தின் உறவினர்கள், சுந்தரபாண்டியனை அடையாளம் கண்டு, காரில் இருந்த அவரைப் பிடித்து இழுத்து சரமாரியாகத் தாக்கினர். அதிர்ச்சியடைந்த போலீஸார், அவர்களிடம் இருந்து ஒருவழியாக சுந்தரபாண்டியனை மீட்டு, காரில் புறப்பட்டுச் சென்றனர்.

‘நல்லொழுக்க வகுப்புகள் இல்லாததே காரணம்’

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி கூறும்போது, ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரித்தேன். மாணவர்களிடையே ‘என் புத்தகத்தை ஏன் கிழித்தாய்? உன் புத்தகத்தை நான் கிழிக்கிறேன் பார்’. என ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் அடிதடியாக மாறி, இந்த எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. இறந்த மாணவர் வினோத்துக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனால், சாதாரண அடியைக்கூட தாங்க முடியாமல் அந்த மாணவர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எது எப்படியிருந்தாலும், தவறு தவறுதான். முன்பெல்லாம், பள்ளி தொடங்கியதும் காலையில் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும். தற்போது இந்த வகுப்புகள் இல்லாததால் மாணவர்களிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, நட்புணர்வு இல்லாமல் போய், ஒழுங்கீனம் அதிகரித்துள்ளது.

மேலும், குழந்தைகளை அடித்தால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்வதால் ஆசிரியர்களும் மாணவர்களை அடிக்க தயங்குகின்றனர். தமிழக அரசு மாணவர்களிடம் நடமாடும் வாகனங்கள் மூலம் மொபைல் கவுன்சிலிங் வழங்கியும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விடுவது வருத்தமளிக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x