Published : 29 Jun 2019 06:26 PM
Last Updated : 29 Jun 2019 06:26 PM

மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கரிமேடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது உறவினர்கள் போலீஸார் தாக்கியதில்தான் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து சடலத்தை வாங்க மறுத்து வருகின்றனர்.

மதுரை பழங்காநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் மணிகண்டன் (28). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்குமிடையே, ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பாக நேற்று மாலையில் தகராறு ஏற்பட்டது.

அப்போது மணிகண்டன் தாக்கியதில், மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் மண்டை உடைந்ததாகக் கொடுத்த புகாரில் கரிமேடு போலீஸார் மணிகண்டனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு சென்ற இடத்தில் மணிகண்டன் கரிமேடு போலீஸாரிடம் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். பின்னர் அதிகாலையில் மீண்டும் நெஞ்சுவலிப்பதாகவும், மயக்கம் வருவதாகவும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலையில் மர்மமான முறையில் மணிகண்டன் உயிரிழந்தார்.

தகவலறிந்த அவரது உறவினர்கள் கரிமேடு காவல்நிலையம் முன்பு திரண்டனர். போலீஸார் தாக்கியதில்தான் மணிகண்டன் உயிரிழந்தார் என புகார் தெரிவித்து முற்றுகையிட்டனர். உடனடியாக அவரது சடலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் திரண்ட அவரது உறவினர்கள் மணிகண்டன் இறப்பில் மர்மம் உள்ளதாக அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்த மணிகண்டன் மீது அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுதொடர்பாக மணிகண்டன் உறவினர்கள் கூறுகையில்,  "ஆட்டோ ஓட்டுநர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார் நெஞ்சுவலிப்பதாகக் கூறிய மணிகண்டனுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. மேலும் போலீஸாரின் கவனக்குறைவாலேயே அவர் இறந்துள்ளார். உண்மையில் உடல்நலம் குன்றி இறந்தாரா? போலீஸார் தாக்குதலில் இறந்தாரா? என எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும். அவரைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில், "ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மண்டையை உடைத்த மணிகண்டனை விசாரணைக்கு அழைத்துச் சென்றோம். நெஞ்சுவலிப்பதாக கூறியதால் உடனடியாக அரசரடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர் போதையில் இருப்பதாகக் கூறி சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். மீண்டும் அதிகாலையில்  நெஞ்சுவலிப்பதாக கூறியதால் ‘மெமோ’ போட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்றோம். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அவர் உடல்நலம் குன்றிதான் இறந்துள்ளார்" எனத் தெரிவித்தனர்.

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x