Published : 30 Jun 2019 12:00 AM
Last Updated : 30 Jun 2019 12:00 AM

வறட்சியால் காய்கறிகள் சாகுபடி பரப்பு 60% குறைந்தது: உற்பத்தியாகும் காய்கறிகளும் கேரளாவுக்கு செல்வதால் தட்டுப்பாடு

தமிழகத்தில் வறட்சியால் காய்கறிகள் சாகுபடி பரப்பு 60 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தியாகும் காய்கறிகளிலும், தரமானவை கேரளாவுக்கு அனுப்பப்படுவதால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழகத்தில் 2.5 லட்சம் ஹெக்டேரில் காய்கறி சாகுபடி நடக்கிறது. விவசாயிகள், ஆடிப்பட்டம் (ஜூன், ஜூலை), தைப்பட்டம் (ஜனவரி, பிப்ரவரி), கோடை பட்டம் (ஏப்ரல், மே) ஆகிய 3 பருவங்களில் காய்கறி பயிரிடுவர். காய்கறி விவசாயத்துக்கு தண்ணீர் மிக அவசியம். அதனால், இருக்கும் தண்ணீரை பொறுத்து அனைத்து பருவங்களிலுமே காய்கறி சாகுபடி நடக்கிறது.

தற்போது வறட்சியால் ஏப்ரல், மே கோடை சீசனில் காய்கறி உற்பத்தி குறைந்து சாகுபடி பரப்பும் ஒரு லட்சம் ஹெக்டேருக்கு கீழாக குறைந்துவிட்டது. தண்ணீர்பற்றாக்குறையால் இந்த சீசனில் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் சாகுபடி பரப்பு 60 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால் தென் தமிழகத்தில் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு உருவாகி அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மதுரை சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது:

ஓசூர், ஊட்டி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், திருப்பூர், கோவையில் இருந்து அதிக அளவு காய்கறிகள் வரும். சில சமயம் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடையும். ஆனால், தற்போது அங்கிருந்து பெரிய அளவில் காய் கறிகள் வரவில்லை. அப்படியே வந்தாலும் தரமாக இல்லை.

வரத்து குறைவு

தேனி, திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பெருமளவு தரமான காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து 90 சதவீதம் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுவதால், அங்கிருந்து மதுரை உட்பட தென் மாவட்ட சந்தைகளுக்கு காய்கறி வரத்து குறைந்து விலை உச்சத்தில் இருக்கிறது.

முக்கிய காய்கறிகளான பீன்ஸ் கிலோ ரூ.80 முதல் ரூ.100-க்கும், காரட் ரூ.60 முதல் ரூ.70-க்கும், அவரை ரூ.50, தக்காளி ரூ.35 முதல் ரூ.40-க்கும், உருளை ரூ.45-க்கும் விற்கப்படுகின்றன. புடலை, சவ்சவ் கூட ரூ.40-க்கு விற்கப்படுகின்றன. சில்லறை கடைகளில் விலை இன்னும் கூடுதலாகும். சென்னைக்கு ஆந்திராவில் இருந்து காய்கறிகள் வருவதால், அங்கு தட்டுப்பாடு இல்லை’’ என்றார்.

பருவ மழை தாமதம்

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதியிடம் கேட்டபோது, ‘‘தென்மேற்குப் பருவ மழை தாமதத்தாலும், கோடையில் கடும் வறட்சியாலும் காய்கறி சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. ஏப்ரல், மே கோடைப் பட்டத்தில் ஓரளவு காய்கறி உற்பத்தியாகி இருந்தால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. மழை ஆரம்பித்துவிட்டால் 15 நாட்களிலேயே சந்தைகளுக்கு காய்கறி வர ஆரம்பித்துவிடும். ஜூனில் பெய்ய வேண்டிய மழை இன்னும் பெய்யாததாலேயே சீசன் மாறிவிட்டது. அதனால், கடுமையான வறட்சி நிலவுகிறது. இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மாற்றி விடுவதால் சாகுபடி குறைவாகிவிட்டது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x