Last Updated : 30 Jun, 2019 12:00 AM

 

Published : 30 Jun 2019 12:00 AM
Last Updated : 30 Jun 2019 12:00 AM

பொருளாதாரச் சிக்கலால் சர்வதேசப் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி கால்பந்து வீரர் மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யுமா?

ஜோர்டானில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்துப் போட்டிக்கு தேர்வான தேனியைச் சேர்ந்த பாலமுருகன், பொருளாதார சிக்கலால் போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்தவர் பாலமுருகன்(26). பிறவியிலே இடது கை வளர்ச்சியின்றி தோள்பட்டையுடன் நின்றுவிட்டது. இவரது கவனம் விளையாட்டுகளின் பக்கம் திரும்பியபோது கோகோ, ஓட்டம் போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார். பின்பு கால்பந்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

பி.ஏ. (ஆங்கிலம்), ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியாளராகச் செயல்பட்டார். இதனால் இப்பள்ளி 21 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது.

தொடர்ந்து கால்பந்து கழகம் உருவாக்கி அதில் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்தார். மூணாறு சைலன்ட்வேலி என்ற இடத்தில் மாநிலங்களுக்கு இடையே நடந்த போட்டியில் இவரது அணி முதலிடம் பெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக மாற்றுத்திறனாளிகள் கால்பந்து அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

2017-ல் கோவாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இவர் கேப்டனாகவும் கலந்து கொண்டார். இந்த அணி 2-ம் இடம் பெற்றது. தொடர்ந்து, தெற்காசியப் போட்டிகளில் கலந்து கொண்டார்.

இவரின் விளையாட்டுத்திறனை அறிந்து ஜோர்டானில் நடைபெற உள்ள சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கால்பந்துப் போட்டியில் இவரது பெயரை இந்திய கால்பந்து மாற்றுத்திறனாளிகள் பிரிவு அமைப்பு (ஐஎப்சிபிஎப்) தேர்வு செய்துள்ளது.

ஆனால் அங்கு செல்ல போதிய நிதிவசதி இல்லாததால் பரிதவிப்பில் உள்ளார். ஏற்கெனவே பணப் பிரச்சினையால் 2018-ல் ஸ்பெயினில் நடந்த போட்டி, கடந்த ஜனவரியில் தாய்லாந்தில் நடந்த போட்டிகளில் இவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து பாலமுருகன் கூறும்போது, எனக்கு தந்தை இல்லை. அம்மா கூலி வேலை செய்கிறார். 2 அக்காள்களுக்கு திருமணமாகிவிட்டது. அம்மா, தங்கையின் வருமானம் மட்டும்தான் குடும்பத்தைக் காப்பாற்றுகிறது. வெளிநாடுகளில் நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடத் தேர்வாகியும்பங்கேற்க முடியவில்லை. 2020-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிநடைபெற உள்ளது. இதற்கு ஜோர்டான் போட்டி உறுதுணையாக இருக்கும். ஆனால், பொருளாதாரச் சிக்கலால் போட்டியில் கலந்துகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x