Published : 30 Jun 2019 12:00 AM
Last Updated : 30 Jun 2019 12:00 AM
தமிழகம் முழுவதும் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு போல நடப்பாண்டும் ஜூலையில் மேட்டூர் அணையானது, முழுக்கொள்ளளவை எட்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை 120 அடி உயரம் கொண்டது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கு, தென்மேற்கு பருவமழைக் காலங்களில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். எனினும், கர்நாடகா மாநிலங்களில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளான கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்டவற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பிய பின்னரே, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ஏற்படும் என்பதால், பெரும்பாலான ஆண்டுகளில் மேட்டூர் அணை நிரம்புவது கேள்விக்குறியாகவே இருக்கும்.
குறிப்பாக, அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டுவதே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் 100 அடி உயரத்துக்கு நீர் இருந்தால் தான், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு, அணையில் இருந்த நீர் திறக்க முடியும் என்ற நிலையும் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டுக்கு முன்னர் 2013-ம் ஆண்டில் தான் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி என்ற முழுக்கொள்ளளவை எட்டியது. அந்த ஆண்டு ஆகஸ்டில் அதிகபட்சமாக விநாடிக்கு 1.78 லட்சம் கனஅடி நீர் வந்தது. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் வரை மேட்டூர் அணை நிரம்பவேயில்லை.
மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டுவது கேள்விக்குறியாக இருந்த நிலையில், 2018-ம் ஆண்டில் ஜூன் மாதத் தொடக்கத்தில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெறும் 37.69 அடியாக மட்டுமே இருந்தது. அப்போது அணைக்கு விநாடிக்கு 2,628 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், ஜூன் பிற்பகுதியில் தொடங்கி, ஜூலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் விநாடிக்கு 1 லட்சம் கனஅடி என்ற வீதத்தில் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அபரிமிதமான நீர் வரத்து காரணமாக, கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதியன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், ஜூலை 23-ம் தேதி மேட்டூர் அணையானது முழுக்கொள்ளளவை எட்டி, நிரம்பி வழிந்தது.
இதன் மூலமாக, 5 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது என்ற சாதனை கடந்த ஆண்டு நிகழ்ந்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி அதிகபட்சமாக விநாடிக்கு 1.95 லட்சம் கனஅடி நீர் அணைக்கு வந்தது. இவ்வளவு நீரும் உபரியாக காவிரியில் திறக்கப்பட்டு கடலில் சென்று கலந்தது. தொடர்ந்து ஒரு வாரம் வரை மேட்டூர் அணையில் இருந்து சராசரியாக விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு காவிரி வழியாக கடலில் சென்று கலந்தது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணை நிரம்பியது என அனைத்துமே ஜூலை மாதத்தில் நிகழ்ந்தது.
இந்நிலையில், நாளை தொடங்கும் ஜூலை மாதத்திலும் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 57.11 அடியாகவும், நீர்வரத்து 1,414 கனஅடியாகவும் இருந்தது. நடப்பாண்டு ஜூலை மாதம் தொடங்கும் நிலையில், அணையின் நீர் மட்டம் நேற்று காலை நிலவரப்படி 43.58 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 224 கனஅடியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT