Published : 29 Jun 2019 12:36 PM
Last Updated : 29 Jun 2019 12:36 PM

தொண்டர்கள் எங்கள் பக்கமே; நிர்வாகிகள் செல்வதால் அமமுகவின் பலம் குறையாது: டிடிவி.தினகரன் நம்பிக்கை

உண்மையான தொண்டர்கள் எங்களிடமே இன்னமும் உள்ளனர். நிர்வாகிகள் செல்வதால் கட்சியின் பலம் குறையாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "அமமுகவில் இருந்து செல்லக் கூடியவர்கள் பணம் மற்றும் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு செல்கின்றனர். உண்மையான தொண்டர்கள் இன்னமும் எங்களிடமே உள்ளனர். தேனி நிர்வாகிகளுடன் ஆலோசித்து புதிய மாவட்ட செயலாளர் தேர்வு குறித்து பேசவுள்ளோம்.

திமுக, அதிமுக எங்களை லெட்டர்பேடு கட்சி என கூறிவிட்டு தற்போது தங்கள் கட்சியின் நிர்வாகிகள் பற்றாக்குறையால்  எங்களது நிர்வாகிகளை அழைத்துச்செல்கின்றனர். தேனி மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக எங்களிடமே உள்ளனர்.

இந்த ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. ஆட்சியைக் காப்பாற்ற போராடிவருகின்றனர். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தேர்தலில் ஆட்சியாளர்கள் படுதோல்வியை சந்திப்பார்கள்.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை இல்லை என  மக்களவையில் ஓபிஎஸ் மகன் பேசியது குறித்து ஊடகங்களும் தேனி மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும்.

டெல்லியின் அச்சுறுத்தலுக்கு பயந்து திமுக சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திரும்ப பெற்றுள்ளனர். டெல்லியின் தலைமைக்கு அச்சப்படுபவர்கள் இந்த ஆட்சியை கலைக்க முயலமாட்டார்கள்.  தங்கதமிழ்ச்செல்வனுக்கு கொடுக்கப்பட்ட அசைண்மெண்ட் என்பது என்னையும், அமமுக குறித்தும் தவறாக பேச வேண்டும் என்பதே. அதனை அவர் செய்துவிட்டு புறப்பட்டு விட்டார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது அணிமாறுவது எப்போதுமே உள்ளது.

தங்கதமிழ்ச்செல்வனின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே சசிகலாவிடம் எடுத்துக் கூறியுள்ளேன். ஊடகங்களில் கட்சி நிலைப்பாடுகள் குறித்து பேசவேண்டாம் என கூறிய நிலையில் மீறி தொடர்ந்து  பேசியதோடு தேனியில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி உத்தரவை மீற செயல்பட்டார். தங்கதமிழ்ச்செல்வன் எங்கிருந்தாலும் வாழட்டும் என நினைக்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x