Last Updated : 03 Aug, 2017 11:45 AM

 

Published : 03 Aug 2017 11:45 AM
Last Updated : 03 Aug 2017 11:45 AM

குமரியில் சுட்டெரிக்கும் வெயிலால் கடும் வறட்சி: 2 லட்சம் கூலித்தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்த நிலையில், கோடைகாலம் போல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையில் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் அதிக நீர்நிலைகள் கொண்ட இம்மாவட்டத்தில் தென்னை, ரப்பர், நெல், வாழை, கிராம்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படும். சராசரி தனி மனித வருவாயும் ரூ.400-க்கு மேல் இருப்பதால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் பிற மாவட்டங்களைவிட இங்கு குறைவாகவே உள்ளனர்.

வீட்டிலேயே முடக்கம்

ஆனால், கடந்த ஓராண்டாக போதிய மழை பெய்யாததால் பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டிட வேலை, தேங்காய் வெட்டுதல், ரப்பர் பால் வெட்டுதல், செங்கல் சூளை, மண்பானை வனைவோர், விவசாய நிலங்களை பண்படுத்துவோர், தென்னை நார் தொழிற்சாலை, முந்திரி தொழிற்சாலை ஆகியவற்றில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் தினக்கூலியாக ரூ.600 முதல் 700 வரை பெற்று வந்த நிலையில், தற்போது மழை பெய்யாததால் வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பலர் அண்டை மாநிலமான கேரளாவுக்கு வேலைக்கு செல்கின்றனர்.

வருவாய் இழப்பு

கடும் வறட்சி காரணமாக தென்னை, வாழை, ரப்பர், நெல் உள்ளிட்ட பயிர்கள் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் வருவாய் இன்றி வறுமையில் வாடுகின்றன.

மேலும், சர்வதேச சுற்றுலா தலமாகன கன்னியாகுமரி, மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற சுற்றுலா மையங்களுக்கு கடந்த இரு மாதங்களாக வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துவிட்டது.

இதுகுறித்து கன்னியாகுமரி சுற்றுலா துறையினர் கூறும்போது, ‘‘கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போதிய மழையின்மை, நடுத்தர, மற்றும் ஏழை குடும்பத்தினருக்கு வருமானம் இல்லாதது போன்றவற்றால் சுற்றுலா செல்லும் திட்டங்களை கைவிட்டு வருகின்றனர்.

அன்றாட வாழ்க்கையை கழிப்பதற்கே வேலையின்றி தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் திண்டாடி வருகின்றனர். இதைவிட பிற மாவட்ட மக்களின் நிலையும் கடினமாக உள்ளது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வருவதையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். பிற மாநிலங்களை பொறுத்தவரை தற்போது மேற்கு வங்கம், குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளே ஓரளவுக்கு வருகின்றனர்.

வெயில் சுட்டெரிப்பதால் இளநீர், நுங்கு, ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் மட்டுமே ஓரளவு விற்பனைக்கு ஆகிறது. மற்றபடி அனைத்து வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x