Published : 16 Aug 2017 11:50 AM
Last Updated : 16 Aug 2017 11:50 AM
திண்டுக்கல்லில் காந்தி பேசிய மைதானத்தில் நினைவுச் சின்னம் எழுப்பி வருங்கால தலைமுறையினருக்கு சுதந்திர போராட்டங்களை நினைவுகூரச் செய்ய வேண்டும் என காந்திய சிந்தனையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர வேட்கையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக மகாத்மா காந்தி 1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி திண்டுக்கல் வந்தார். அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் இந்தியா விடுதலை பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சுதந்திரத்துக்குப் பிறகு காந்தியை நினைவுகூறும் வகை யில் திண்டுக்கல்லில் அவர் பேசிய மைதானத்துக்கு காந்தி மைதானம் எனப் பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து அவர் பேசிய இடத்தில் கான்கிரீட் மேடை அமைத்து தொடர்ந்து பல்வேறு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடமாகத் திகழ்ந்தது.
காலப்போக்கில் இந்த மைதானத்தை காய்கறி சந்தையாக அப்போதைய திண்டுக்கல் நகராட்சி நிர்வாகம் மாற்றியது. இதன் விளைவாக காந்தியின் நினைவாகப் போற்றப்பட்ட மேடையில் தற்போது காய்கறி கடை நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதும் காந்திய சிந் தனையாளர்கள், இந்த மேடையை இன்னமும் புனித மேடையாகவே கருதுகின்றனர். இதற்கு சான்றாக ‘காந்தி காலடிபட்ட இடங்களை தேடி’ என்ற நிகழ்ச்சியை நடத்தி கடந்த 2011-ம் ஆண்டு அவர் பேசிய தினத்தில் காந்தி பேசிய மேடையில் கல்வெட்டு ஒன்றும் நிறுவியுள்ளனர்.
இது குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த காந்திஜி நினைவு அறக்கட்டளைத் தலைவர் என்.பாஸ்கரன் கூறியதாவது:
திண்டுக்கல் நகரில் காந்தி பேசிய இடத்தை பராமரிக்க வேண்டும் என்பதே காந்திய சிந்தனையாளர்களின் விருப்பம். இதன் மூலம் எதிர்கால தலைமுறை சுதந்திரப் போராட்டத்தில் திண்டுக்கல் நகர மக்களின் பங்களிப்பையும் அறிந்து கொள்ள முடியும்.
காந்தி பேசிய இடத்தில் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உதவியுடன் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். அப்போது தான் திண்டுக்கல் நகரில் காந்தி காலடிபட்ட நினைவுகளைப் போற்றி பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் சுதந்திரப் போராட்ட நினைவுகளை வருங்காலத் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT