Published : 07 Aug 2017 04:21 PM
Last Updated : 07 Aug 2017 04:21 PM

மாவோயிஸ்டுகளை தேடறாங்க; குடிதண்ணி தரமாட்டேங்கிறாங்க! - விநோத ஏக்கத்தில் கோவை பழங்குடி கிராமங்கள்

'தினம் தப்பினாலும் தப்பும். எங்க ஊர்ல மாவோயிஸ்டுகளை தேடி, போலீஸ்காரங்க, ஃபாரஸ்ட்டுருங்க வர்றது மட்டும் தவற மாட்டேங்குது. ஆனா குடிக்க ஆத்துத்தண்ணி மட்டும் அதிகாரிங்க கொண்டு வர மாட்டேங்கிறாங்க!' என விநோத புகாரை கிளப்பிக் கொண்டிருக்கிறது கோவை மாவட்டத்தின் மேற்கே கேரள எல்லையோரம் தமிழக பகுதியில் அமைந்திருக்கும் சில பழங்குடியின கிராமங்கள்.

கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது தோலம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள் கோபனாரி, பட்டிசாலை, சீங்குலி, ஆலங்கண்டி, ஆலங்கண்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இவற்றில் 300க்கும் மேற்பட்ட இருளர் இன பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமங்களை ஒட்டியுள்ள கொடுங்கரை பள்ளத்தை தாண்டினால் கேரளா பகுதிக்குட்பட்ட மலை கிராமங்கள் வந்து விடுகிறது. பட்டிசாலையில் போலீஸ் சோதனைச் சாவடி இருக்கிறது. இதில் காவலர்கள் 2 ஷிப்டுகளில் பணியாற்றுகிறார்கள். அதையொட்டி அதிரடிப்படை போலீஸாரும் முகாமிட்டிருக்கிறார்கள்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள அட்டப்பாடி பிரதேசத்தை ஒட்டி இக்கிராமங்கள் அமைந்துள்ளதால் தினமும் அதிரடிப்படை போலீஸார், க்யூ பிரிவு போலீஸார் மற்றும் வனத்துறையினர் மாறி மாறி வந்து அந்நியர் நடமாட்டம் ஏதாவது உள்ளதா? தேவையில்லாத போன் கால்கள் யாருக்காவது வந்துள்ளதா? அரிசி, பருப்பு, மளிகைப் பொருள் கேட்டு புதியவர்கள் வந்தார்களா? என்றெல்லாம் இங்குள்ள மக்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

அதற்கேற்ப மக்களிடம் இணக்கமாகவும் பழகி வருகிறார்கள். பள்ளிக்கூட மாணவர்கள், மாங்கரை ஆனைகட்டி, காரமடை என வேலைக்கு போகும் ஆண், பெண்களை தம் வாகனங்களில் ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடங்களில் இறக்கி விடுவதும், அவர்கள் பள்ளிக்கூடம்- வேலை முடித்து திரும்புகையில் வழியில் எதிர்பட்டால் வாகனத்தில் ஏற்றிக் கொள்வதும் கூட நடக்கிறது.

இதனால் போலீஸாரும், இப்பகுதி கிராம மக்களும் இரண்டற கலந்தே வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. 'அப்படியெல்லாம் இருந்து என்ன பயன்? இங்கே குடிப்பதற்கு தண்ணீர் கூட கொண்டு வரமாட்டேங்கிறாங்க. இடிஞ்சு கிடக்கிற வீடுகளை கூட கட்டித்தர மாட்டேங்கிறாங்க. அதுலயும் ஒரு வீட்டுல 3 குடும்பங்கள், 4 குடும்பங்கள் எல்லாம் இருக்கோம். அதுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய மாட்டேங்கிறாங்க!' என புலம்பித் தவிக்கின்றனர் இங்கு காலம் காலமாக வசித்து வரும் பழங்குடியினர்.

இதுகுறித்து இங்குள்ள பட்டிசாலை பழங்குடி கிராமத்து மூப்பன் மருதன் கூறுகையில், ''எங்க ஊர்ல மட்டும் 25 வீடுகள் எம்ஜிஆர் காலத்துல 40 வருஷத்துக்கு முன்னால கட்டிக் கொடுக்கப்பட்டது. அது இடிஞ்சு பழசாகி கிடக்கு. அதுலயே ரெண்டு மூணு குடும்பங்கள் இருக்கு. என் வீட்லயே எடுத்துக்குங்க, என் மகன் குடும்பத்துல 3 பசங்க, எம் மகள் குடும்பத்துல 3 பசங்கனு குடியிருக்கோம். இங்கே ஆடு, மாடு மேய்க்கிறதுதான் தொழில். கிடைச்ச கூலிக்கு போவோம். அதுவும் மழையில்லாததால் பெரிசா வேலையும் கிடைக்கிறதில்ல. அத்திக்கடவுல இருந்து குடிக்க தண்ணி கொண்டு வர்றேன்னாங்க. அப்படி சொல்லித்தான் தொட்டியும் கட்டினாங்க. இன்னைக்கு வரைக்கும் வரலை. போர் தண்ணியத்தான் குடிச்சிட்டிருக்கோம். அதனாலே நோய் நொடின்னு வருது. புது வீடு கட்டலாம்னு நினைச்சா முதல் தவணை 80 ஆயிரமோ கட்டினாத்தான் முடியும்ங்கிறாங்க. நாங்க இருக்கிற நிலைமைக்கு அதுக்கு எங்கே போவோம்?!'' என்றார்.

இங்கே வீடுகள் மட்டுமல்ல; கிணற்று தடுப்புச்சுவர், மூடி எல்லாமே இடிபாடுகளுடன்தான் கிடக்கிறது. ஊரையே புதர்சூழ்ந்து கிடக்கிறது.

''இங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேல்பாவி கிராமத்திற்கு அத்திக்கடவிலிருந்து குடிநீர் வந்துவிட்டது. அங்கிருந்து இங்கே கொண்டு வரமாட்டேங்கிறாங்க. நாங்களும் ஏழெட்டு வருஷமாக ஊராட்சியில் கேட்டுட்டே இருக்கோம். காரியம் நடக்க மாட்டேங்குது.

இந்த போர் தண்ணிய குடிச்சுக்குடிச்சே இங்கே சுத்துப்புறத்துல இருக்கிற பத்து பதினஞ்சு கிராமத்து மக்களுக்கு கிட்னி பெயிலியர், இருதயக்கோளாறு எல்லாம் வருதுங்கறாங்க. அதை யார் கவனிக்கிறாங்க. ஆனா போலீஸ் மட்டும் தினம் தினம் வந்து மாவோயிஸ்டு வந்தாங்களான்னு மட்டும் கேட்டுட்டே போறாங்க!'' என்றனர் சீங்குழி, கோபனாரியை சேர்ந்த பெண்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x