Published : 17 Nov 2014 10:17 AM
Last Updated : 17 Nov 2014 10:17 AM
சென்னை அயனாவரம் பகுதியின் நடைபாதையோரம் வாழும் மக்களிடம் உரையாடிக் கொண்டிருக்கின்றனர் சில இளைஞர்கள்.
முகத்தில் விழும் சிக்குபிடித்த தலைமுடியை அனிச்சையாய் ஒருகையால் ஒதுக்கிவிட்டபடியே இன்னொரு கையை அவர்களிடம் நீட்டி காசு கேட்கிறான் ஒரு சிறுவன். அவனுக்கு சாப்பிடுவதற்கு பிஸ்கெட் கொடுக்கிறார்கள். அவன் வாங்க மறுத்து, “எனக்கு காசுதான் வேணும்… அம்மாவுக்கு மருந்து வாங்கணும்” என்கிறான். அப்போதைக்கு ஒரு பத்து ரூபாயை கொடுத்துவிட்டு அந்த இளைஞர் குழு அவனை கைகழுவவில்லை. அவனுடைய அம்மாவிடம் பேசி, அவருக்கு மருத்துவ உதவிகளை அளித்துவிட்டு அந்த சிறுவனை படிக்கவைக்கின்றனர். அந்த சிறுவனின் பெயர் ஜெயவேல். அந்த இளைஞர்கள் அடங்கிய குழு சுயம் அறக்கட்டளை.
இன்றைக்கு ஜெயவேல் லண்டனில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன். இந்த மாற்றம், `டைட்டில்-சாங்’ முடிவதற்குள் சினிமாவில் காட்டப்படும் மாற்றம் அல்ல.
15 ஆண்டுகளாக..
முதல் தலைமுறை படிப்பாளிகளை இந்த சமூகத்தில் உண்டாக்க நினைத்த இளம் நெஞ்சங்களின் போராட்டம். இப்படிப்பட்ட போராட்டத்தில் தங்களை கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அமைப்பு சுயம் அறக்கட்டளை. விளிம்பு நிலை குடும்பத்தின் குழந்தைகளுக்காகவே ஆவடி அடுத்துள்ள பாலவேடுபேட்டையில் `சிறகு’ மான்டிசோரி பள்ளியை நடத்துகிறது இந்த அறக்கட்டளை. அதன் அறங்காவலர், நிறுவனர் டாக்டர் உமா, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
1999-ம் ஆண்டு ஒருமித்த சிந்தனையுள்ள நண்பர்கள் சேர்ந்து இந்த அமைப்பை தொடங்கினோம். குழந்தை நோயாளிகளுக்கு தேவைப்படும் ரத்தத்தை தன்னார்வ கொடையாளர்களைக் கொண்டு ஏற்பாடு செய்வது, மருத்துவ உதவிகளை அளிப்பது போன்றவற்றை செய்துவந்தோம்.
ஒருகட்டத்தில் எங்களது முழுக் கவனமும் நடைபாதையில் வாழும் சிறுவர்களையும் பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்டு வாழும் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளையும் மீட்டு அவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதில் திரும்பியது.
1999-ம் ஆண்டில் அப்படிப்பட்ட மூன்று குழந்தைகளை எங்கள் கண்காணிப்பின்கீழ் கொண்டுவந்தோம். இந்தமுறையில் நாங்கள் ஆளாக்கிய முதல் குழந்தைதான் ஜெயவேல். வாய்ப்பு வழங்கப்பட்டால் என்னாலும் படிக்கமுடியும் என்பதை நிரூபித்தார். படிக்கும்போதே, விடுமுறை நாட்களில் சிறுசிறு பொருட்களை விற்று அந்தப் பணத்தை தாயிடம் தருவார். அவர் இன்றைக்கு லண்டன் ரெக்ஸ்ஹாம் நகரத்தில் உள்ள கிளிண்டுவார் பல்கலைக்கழகத்தில் கார் தொழில்நுட்பக் கல்வி (performance car technology) இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.
அவர் அங்கேயே `பார்ட்-டைம்’ வேலைபார்த்து அவருடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார். அவருக்கு மூன்றாம் ஆண்டு செமஸ்டர் கட்டணம் கட்டுவதற்கு நல்ல உள்ளங்களின் உதவியை எதிர்பார்க்கிறோம். பிளஸ் டூ வரை நாங்கள் இலவச கல்வியை அளிக்கிறோம். மேற்படிப்புக்கு ஆகும் செலவை இவர்கள் கடனாகப் பெற்று வேலைக்கு சென்று சம்பாதித்து திருப்பித் தரவேண்டும். அதைக் கொண்டு பிற மாணவர்களுக்கு உதவுகிறோம்.
500 குழந்தைகள்..
இன்றைக்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தரமான கல்விச் சேவை செய்கிறோம். ஒவ்வொரு குழந்தைக்குள் இருக்கும் சுயமும் முக்கியம். அதைக் கல்வியின் மூலமாக கொண்டுவருவது அவசியம்.
இவ்வாறு டாக்டர் உமா கூறினார்.
தொடர்புக்கு: >www.suyam.org, >www.siragu.org.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT