Published : 22 Aug 2017 07:41 PM
Last Updated : 22 Aug 2017 07:41 PM
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி - கடலூர் சாலைக்கு அருகே, சின்ன வீராம்பட்டினரம் கிராமத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்காக மொத்தம் 19 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று ஆளுநர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர்.
அதற்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்குவதற்காக பயணம் செய்கின்றனர் என்ற தகவல் வெளியானது. அத்தகவலை உறுதி செய்யும் விதமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், மாரியப்பன், கென்னடி, முத்தையன், தங்கதுரை, பார்த்திபன், ஜெயந்தி, பத்மநாபன், உமா மகேஸ்வரி, கதிர்காமு, சுப்ரமணியன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரங்கசாமி, ஏழுமலை, கோதண்டபாணி, முருகன் ஆகியோர் புதுச்சேரி சொகுசு விடுதிக்கு வருகை தந்தனர்.
வெற்றிவேல் எம்.எல்.ஏ மட்டும் இன்னும் சொசுகு விடுதிக்கு வரவில்லை. அவர் விரைவில் வருவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அடையாளம் மறைத்த எம்.எல்.ஏக்கள்
எம்.எல்.ஏக்கள் பலர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சொகுசு விடுதிக்குள் நுழைந்தனர். அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும் 'நான் பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர். மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன்' என்று சொல்லியே விடுதிக்குள் நுழைந்து சென்றார்கள்.
தினகரன் நாளை வருகை
தினகரன் நாளை வருகிறார். சொகுசு விடுதியில் இருந்தபடி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT