Published : 09 Apr 2014 11:34 AM
Last Updated : 09 Apr 2014 11:34 AM
சிறந்த கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை கவுரவிக்கும் விதமாக சென்னை லயோலா கல்லூரிக்கு ‘சீர்மிகு கல்லூரி’ என்ற சிறப்பு அந்தஸ்தை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வழங்கியுள்ளது. 3 முறை தன்னாட்சி அந்தஸ்து, 3 முறை தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) ‘ஏ’ கிரேடு பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறந்த கல்லூரியைத் தேர்வுசெய்து ‘சீர்மிகு கல்லூரி’ (காலேஜ் ஆப் எக்சலென்ஸ்) என்ற சிறப்பு அந்தஸ்தை யு.ஜி.சி. வழங்கி வருகிறது.
அந்த வகையில், நாடு முழுவதும் குறிப்பிட்ட தகுதி பெற்ற 48 கல்லூரிகளில் 8 கல்லூரிகள் யு.ஜி.சி. யின் சிறப்பு அந்தஸ்துக்கு இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளன. அவற்றில் தமிழகத்தில் சென்னை லயோலா கல்லூரியும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும் அடங்கும்.
லயோலா கல்லூரிக்கு யு.ஜி.சி. சிறப்பு அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து அக்கல்லூரி முதல்வர் பாதிரியார் ஜி.ஜோசப் அந்தோணி சாமி நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1925-ம் ஆண்டு வெறும் 75 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட லயோலா கல்லூரி இன்று 11,181 மாணவ, மாணவிகள் படிக்கக்கூடிய பெரிய கல்லூரியாக வளர்ந்துள்ளது. 23 துறைகள் உள்ளன. இங்கு பல்வேறு வகையான ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. 250 ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் 166 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. நீண்ட காலக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு யு.ஜி.சி.யின் சிறப்பு அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இது பல்கலைக்கழக அந்தஸ்துக்கு முந்தைய அந்தஸ்து ஆகும்.
இதன்மூலம் ஆராய்ச்சிப் பணிகளுக்காக யு.ஜி.சி. ரூ.2 கோடி அனுமதி அளித்துள்ளது. இந்த அந்தஸ்து கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதன்மூலம் ஆராய்ச் சிப் பணிகளுக்காக லயோலா கல்லூரி எந்த விதமான நிதி உதவி கேட்டாலும் கிடைக்கும்.
இவ்வாறு ஜோசப் அந்தோணி சாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT