Published : 24 Aug 2017 06:37 PM
Last Updated : 24 Aug 2017 06:37 PM
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி அரசு கொறடாவின் செயல்பாடு உள்ளது. இதனால் அவர் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம் என்று எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூறினர்.
புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு வெளியே இன்று மாலை கூட்டாக பேட்டியளிப்பதாக தெரிவித்தனர். ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் சுமார் 10 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வந்தனர். செந்தில்பாலாஜி, பெண் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் வெளியே வரவில்லை.
அதைத்தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
''அரசு கொறடா உத்தரவை மீறி நாங்கள் சட்டப்பேரவையில் செயல்பட்டிருந்தால்தான் அவரால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதுபோல் நடக்கவில்லை.
19 எம்.எல்.ஏக்கள் இணைந்திருப்பதையே அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஸ்லீப்பர் செல் போல் 50 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் எங்களுடன் சேரக்கூடாது என்ற குருட்டு சிந்தனையில் செயல்படுகின்றனர்.
நாங்கள் அதிமுகவில்தான் உள்ளோம். இதில் கட்சித் தாவல் எங்கே வந்தது. சட்டப்பேரவையில் தனியாகப் பிரிந்து செயல்பட்ட ஓபிஎஸ் அணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி அரசு கொறடாவின் செயல்பாடு உள்ளது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட கொறடா மீது வழக்கு தொடருவோம்.
அரசுக்கு எதிராக ஊழல் புகார் கூறி செயல்பட்டு, பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து பதவி தருகின்றனர். நாங்கள் இழந்த உரிமைகளை மீட்க காத்துள்ளோம். எங்களுக்கு கொறடா அளித்த நோட்டீஸ் குறித்து கவலையில்லை. ஸ்லீப்பர் செல் போல் உள்ள எம்.எல்.ஏக்களை மிரட்டவே இந்த செயலை செய்கின்றனர்.
9 எம்.எல்.ஏக்களை மட்டுமே ஓபிஎஸ் வைத்திருந்தார். நாங்கள் 19 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக இருப்பது அவர்கள் கண்ணை உறுத்துகிறது. பெண் எம்.எல்.ஏக்கள் உள்பட மீதமுள்ள அனைவரும் அறையில் உள்ளனர். நாங்கள் ஒற்றுமையாகதான் உள்ளோம் டிடிவி தினகரன் கண்டிப்பாக வருவார், எப்போது என்பதைச் சொல்ல இயலாது'' என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT