Published : 29 Aug 2017 11:18 AM
Last Updated : 29 Aug 2017 11:18 AM

அதிமுக அணியினர் டெல்லியில் முகாம்: தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க திட்டம்?

சென்னை அடுத்தடுத்து வரும் மாற்றங்களை அடுத்து அதிமுக அணியினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். டெல்லிக்கு சென்றுள்ள அதிமுக முக்கிய நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல மாற்றங்களை அதிமுக சந்தித்து வருகிறது. முதலில் ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி பின்னர் ஓபிஎஸ் நீக்கப்பட்டார், அதன் பின்னர் சசிகலா முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ஓபிஎஸ் தனி அணி அமைக்க அடுத்த மாற்றம் நடந்தது.

பின்னர் சசிகலாவுக்கு தண்டனை, எடப்பாடி முதல்வராக தேர்வு, தினகரன் கட்சிக்குள் வருதல் என பல மாற்றங்களை சந்தித்தது. பின்னர் திடீரென தனது நிலையில் இருந்து தலைகீழ் நிலை எடுத்த எடப்பாடி அணியினர் ஓபிஎஸ்சுடன் கைகோர்க்க மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இவரைத்தான் நீக்குவது என்றில்லாமல் சகலரையும் தினகரன் நீக்க, தினகரன் நியமனமே செல்லாது பின் எப்படி அவரது முடிவுகள் செல்லும் என அதிமுக பொதுக்குழு தீர்மானம் போட்டது.

இதையடுத்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றும் தீவிர முயற்சியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். முதல் கட்டமாக பொதுக்குழு கூட்டத்தேதியை அறிவித்துள்ள அவர்கள் அடுத்த கட்டமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க டெல்லிக்கு பயணமாகியுள்ளனர்.

அதிமுகவின் முக்கிய அமைச்சர்களான தங்கமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், மற்றும் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நேற்றே டெல்லி சென்றுவிட்டனர். ஏற்கனவே தம்பிதுரை அங்குள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள அனைவரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கும் திட்டத்தில் உள்ளனர். ஆனால் இன்று சந்திக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரம் ஒதுக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு இல்லத்தில் அமைச்சர்களுடன் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆலோசனை நடத்தினர். இதில் தம்பிதுரையும் கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்ட முடிவில், தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திப்பது, அவர்களிடம் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்களை வழங்குவது, பொதுக்குழு கூட்டம் பற்றிய தகவல் மற்றும் தங்களது பிரமாண பத்திரங்களை இருபுறமும் வாபஸ் வாங்குவது உள்ளிட்டவை இருக்கும் என அங்குள்ள அதிமுக தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று ஆலோசனை நடத்திய பின்னர் தம்பிதுரை தலைமையில் அனைவரும் நாளை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திப்பார்கள் என தெரிகிறது. இடையில் நிர்மலா சீத்தாராமன் போன்ற பாஜக அமைச்சர்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x