Published : 18 Aug 2017 09:26 AM
Last Updated : 18 Aug 2017 09:26 AM
மதுரை வைகை ஆற்றுக்குள் கபடி போட்டி நடத்துவதற்கு பெரிய இயந்திரங்கள் மூலம் சீரமைத்து செம்மண் அடித்து மைதானம் தயாராகி வருகிறது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் அவற்றை தடுக்க முன்வரவில்லை. இந்நிகழ்ச்சியில், உள்ளூர் அமைச்சர் செல்லூர். கே.ராஜூ பங்கேற்பார் என கூறப்படுகிறது.
வைகை ஆற்றில் தற்போது நீரோட்டம் இல்லை. மதுரையின் சில பகுதிகளில் இருந்து ஆற்றில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் ஆற்றின் வடகரைப்பகுதியில் செல்லூர் அருகே வைகை ஆற்றுக்குள் நேற்று திடீரென்று கபடி மைதானம் அமைக்கும் ஏற்பாடு மும்முரமாக நடைபெற்றது. கடந்த சில நாட்களாக ஆற்றுக்குள் பெரிய இயந்திரங்களைக் கொண்டு சீரமைத்து மண்ணை சமநிலைப்படுத்தினர். நேற்று செம்மண் அடித்து அதை ரோலர் வைத்து அமுக்கி கபடி மைதானம் அமைத்துள்ளனர்.
பொதுமக்கள் அதிர்ச்சி
ஆற்றின் நீரோட்டப் பகுதியில் தூர்வாரும் பணியைத் தவிர மற்ற நிகழ்ச்சிகள் நடத்தவோ செயற்கையாக மண்ணை அள்ளுவதோ, கொட்டுவதோ சட்டப்படி குற்றமாகும். பொதுப்பணித் துறை அதிகாரிகள் அவற்றை தடுக்க முயற்சிக்காதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் கூறியதாவது: முன்பு ஒரு முறை நாங்கள் வைகை ஆற்றில் இயந்திரங்கள் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றுவதற்கு பொதுப்பணித் துறையிடம் அனுமதி கேட்டிருந்தோம். அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. தடையை மீறி இயந்திரங்கள் மூலம் ஆகாயத் தாமரையை அகற்றினால் ஆற்றில் மணல் அள்ளுவதாக கூறி பிடித்து வைத்துவிடுவோம் என்றனர்.
ஆனால், தற்போது வைகையில் எந்த அடிப்படையில் கபடி மைதானம் அமைக்க அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் அனுமதி கொடுக்காவிட்டாலும் நடந்த தவறை அவர்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
தற்போது கபடி போட்டி நடக்க ஏற்பாடுகள் நடப்பதையும் கண்டும் காணாமல் உள்ளனர். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதாக கூறப்படுகிறது என்று அவர் கூறினார்.
அனுமதி வழங்கவில்லை
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, ‘வைகை ஆற்றில் கபடி விளையாட்டு நடத்தவும், அதற்கு மைதானம் அமைக்கவும் யாருக்கும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை. தண்ணீர் வராததால் சிறுவர்கள், கிரிக்கெட், கபடி விளையாடுவார்கள். மைதானம் அமைத்து போட்டி நடத்துவதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதுகுறித்து, அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை தொடர்பு கொண்டபோது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT