Last Updated : 28 Apr, 2017 04:10 PM

 

Published : 28 Apr 2017 04:10 PM
Last Updated : 28 Apr 2017 04:10 PM

இருஅணிகள் இணைப்பு தேவையில்லை என்பதே தொண்டர்கள் விருப்பம்: செம்மலை பேட்டி

அதிமுகவின் இரு அணிகளும் இணையத் தேவையில்லை என்பதே தொண்டர்கள் கருத்தாக இருப்பதாக சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான செம்மலை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வம், விஜயலட்சுமி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தொண்டர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு அணிகள் இணைப்பு குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டபோது பெரும்பாலான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணையத் தேவையில்லை எனக் கருத்து கூறியதாக செம்மலை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் செம்மலை கூறியதாவது:

"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணையத் தேவையில்லை என்பதே தொண்டர்களின் கருத்தாக இருந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தையும்விட தொண்டர்களின் கருத்தே முக்கியத்துவம் வாய்ந்தது. இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை தலைமையிடம் எடுத்துரைப்போம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் ஒதுக்கிவைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளில் எவ்வித சமரசமும் கிடையாது. நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இணைப்பு சாத்தியமாகும். எங்களது நிபந்தனைகளை ஏற்று முறைப்படி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கவேண்டும். அதைவிடுத்து குறுந்தகவல் மூலமும் ஊடகங்கள் வாயிலாகவும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஊழலற்ற, வெளிப்படையான, நம்பகத்தனமை நிறைந்த ஆட்சியை ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமேதர முடியும். விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நல்லாட்சி அமையும்" என்றார்.

எடப்பாடி பழனிசாமியை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு சசிகலாவை ஏற்கமாட்டோம் அப்படியிருக்கும்போது சசிகலாவால் நியமிக்கப்பட்டவரை எப்படி ஏற்போம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x