Last Updated : 04 Aug, 2017 08:47 AM

 

Published : 04 Aug 2017 08:47 AM
Last Updated : 04 Aug 2017 08:47 AM

140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் தூர்வார அரசு திட்டம் - ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பீடு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகளைத் தூர்வார அரசு திட்டமிட்டுள்ளது. பல லட்சம் லோடு அளவுக்கு மண் இருப்பதால் அவற்றை விற்பதன் மூலம் ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் பல்லவர் ஆட்சிக் காலத்தில் இருந்து பயன்பாட்டில் உள்ளன. பூண்டி, சோழவரம் ஏரிகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு மேம் படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப் பட்டு நீர்வழிப் பாதைகள் முறைப் படுத்தப்பட்டன. 1950-களில் பூண்டி ஏரி தண்ணீர் முழுவதும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.

சென்னை நகரின் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு பின்னர் அது மாற்றப்பட்டது. அப்பகுதி விவசாயிகள், உள்ளூர் மக்களிடம் பேசி சமாதானம் செய்து, பூண்டி ஏரி தண்ணீர் முழுவதையும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்துவது என்று அப்போது தீர்மானிக்கப் பட்டது. அதன்பிறகு பூண்டி ஏரித் தண்ணீரை சோழவரம் ஏரி வழியாக புழல் ஏரிக்கு கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வரும் இந்த நான்கு ஏரிகளும் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி காரணமாக தற்போது வறண்டு கிடக்கின்றன. ஏரியில் தண்ணீர் வற்றினாலும் பொக்லைன் இயந்தி ரத்தைக் கொண்டு செல்லும் அளவுக்கு நிலப்பகுதி காய்ந்தால் தான் தூர்வாரும் பணியை மேற் கொள்ள முடியும். தற்போது அந்த அளவுக்கு நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டதால் அவற்றைத் தூர்வார அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘பூண்டி, புழல் உள்ளிட்ட 4 ஏரிகளில் அள்ளப்படும் மண், சாலை போடுவதற்கும் பள்ளங்களில் போட்டு நிரப்புவதற்கும் வீடு போன்ற கட்டுமானங்களின் அடித் தளத்தில் கொட்டுவதற்கும் ஏற்றவை ஆகும். ஒரு கன மீட்டர் மண் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்கலாம். அதன்படி, 4 ஏரிகளிலும் அள்ளப்படும் மண்ணை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் ஏரிகளில் தூர் வாரும் பணி விரைவில் தொடங்கும்” என்றார்.

சென்னை குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது:

ஏரிகளைத் தூர்வாருவதென் றால் ஏரி முழுவதும் தூர்வாருவது என்று அர்த்தமில்லை. ஏரிகளைப் பொறுத்தவரை நீர்வரத்து குறை வாக இருக்கும்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மதகுகள் வரை தண்ணீர் வந்து சேர்வதற்காக சிறியதும் பெரியதுமாக வரத்து வாய்க்கால்கள் இருக்கும். அந்த வாய்க்கால்களில் அடிப்பகுதிக்கு மேல் படிந்துள்ள மண் மட்டுமே அள்ளப்படும்.

ஏரியின் அடிப்பகுதிகளில் மண்ணாக இருக்கும். அதை தூர்வாரிவிட்டால் ஏரிக்கு வரும் நீர் முழுவதும் நிலத்துக்குள் போய் விடும்.

களிமண்ணால் உருவான அடிப்பகுதிக்குமேல் படிந்துள்ள மண் மட்டுமே அள்ளப்படும். சென் னைக்கு குடிநீர் வழங்கும் இந்த ஏரிகளில் 1987-ம் ஆண்டும், 1993-ம் ஆண்டும் தூர்வாரப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x