Last Updated : 06 Nov, 2014 12:46 PM

 

Published : 06 Nov 2014 12:46 PM
Last Updated : 06 Nov 2014 12:46 PM

ரஜினிகாந்த் அரசியலில் நுழையக் கூடாது: இளங்கோவன்

"தமிழக மக்களால் மரியாதைக்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் என்றுமே நுழையக் கூடாது என்பதே எனது விருப்பம்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், "நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது. இது எனது தனிப்பட்ட கருத்துதான். அவருக்கு அனைத்து அரசியல் கட்சியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மேலும், தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை பெற்றுள்ளார். மறைந்த ஜி.கே மூப்பனார் வழியில் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 1996-ஆம் ஆண்டு ஆதரவு தெரிவித்தார். அதுபோல அவர் தன்னை ஒரு சிறிய வட்டத்துக்குள் சுருக்கிக்கொள்ளக் கூடாது.

ரஜினிகாந்த் மட்டுமல்ல, மதசார்பின்மையோடு இருக்கும் அனைத்து மக்களையும் நான் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்காக அழைப்பு விடுக்கிறேன்" என்றார்.

1996-ஆம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மறைந்த ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். அதே ஆண்டு அதிமுக தலைமையிலான அரசை குறைகூறிய நடிகர் ரஜினிகாந்த், அப்போது திமுக-வுக்கும் அந்தக் கட்சி தலைமையில் கூட்டணியாக இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா முதல்வராக தேர்வு செய்யப்பட்டால், தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று அவர் கூறினார்.

அப்போது முதலே நடிகர் ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தேர்தலிலும் இருந்து வருவது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x