Published : 08 Aug 2017 10:41 AM
Last Updated : 08 Aug 2017 10:41 AM
நாகர்கோவில் பகுதியில் பட்டி, தொட்டியெங்கும் ஆட்டோக்களில் ‘ஜம்போ சர்க்கஸ்’ மைக் விளம்பரம் தூள்பறக்கிறது. குக்கிராமங்களிலும் சர்க்கஸ் குறித்த சுவரொட்டிகள். லோக்கல் சேனல்களிலும் சர்க்கஸ் விளம்பரங்கள் அவ்வப்போது எட்டிப் பார்த்துவிட்டுப் போகின்றன. இத்தனையும் செய்தாலும், சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு சம்பளமும் சாப்பாடும் கொடுக்கக்கூட முடியாத பரிதாபத்தில் உள்ளது சர்க்கஸ் தொழிலின் இன்றைய நிலை!
ஒரு ஊரில் சர்க்கஸ் போடவேண்டுமானால், அதற்கு ஒருமாதம் முன்பாகவே சர்க்கஸ் கம்பெனியைச் சார்ந்த ஒரு குழுவினர் அந்த ஊரில் முகாமிடுகின்றனர். உள்ளாட்சி தொடங்கி அனைத்துத் துறையிலும் தடையில்லாச் சான்று பெற்று அதன்பிறகு அடுத்தகட்ட பணிகளைத் தொடங்குகிறார்கள். சர்க்கஸ் கூடாரம் அமைக்கவே அதிகபட்சம் 5 நாள்கள் ஆகிறது.
ஜம்போ சர்க்கஸுக்காக நாகர்கோவிலில் பிரம்மாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றிலும் முளைத்திருக்கும் குட்டிக், குட்டி குடில்களில் சர்க்கஸ் கலைஞர்கள் தங்கியிருக்கிறார்கள். பெண் கலைஞர்கள் சிலர், சர்க்கஸ் மைதானம் அருகிலேயே வீடு எடுத்து மொத்தமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தனித் தனியாக நான்கு கேன்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிலுக்குள் தூக்கம், காலைப் பொழுதில் சின்னதாய் ஒரு நகர்வலம், சர்க்கஸில் ரசிகர்கள் வெகுமதியாய் அள்ளித்தரும் கைதட்டல்கள் என நகர்கிறது இந்தக் கலைஞர்களின் அன்றாட வாழ்க்கை.
8 கம்பெனிதான் இருக்கு
எனினும், சாகசங்களால் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும் தங்களுக்கும் சர்க்கஸுக்கும் மக்களிடம் முன்பிருந்த ஆதரவு இல்லை என்பதுதான் இவர்களைச் சுற்றும் கவலை! அதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஜம்போ சர்க்கஸ் கம்பெனி மேலாளர் டைட்டஸ் வர்க்கீஸ். “நான் சர்க்கஸ்ல சேர்ந்து 34 வருசமாச்சு. முன்பெல்லாம் சர்க்கஸ்னாலே பண்டிகைக் கொண்டாட்டமா இருப்பாங்க மக்கள். மாட்டுவண்டி கட்டிக்கிட்டு குடும்பத்தோட வந்து சர்க்கஸ் பார்த்துட்டுப் போவாங்க. பிரதமர்கள், முதல்வர்கள் எல்லாம்கூட மக்களோடு, மக்களாக இருந்து எங்க சர்க்கஸை ரசிச்சுருக்காங்க. ஆனா, இப்ப அப்படியெல்லாம் இல்ல.
விலங்குகளை பார்க்கவே பெரும்பகுதிக் குழந்தைங்க ஆர்வத்தோட சர்க்கஸுக்கு வருவாங்க. எங்ககிட்ட முன்னாடி, சிங்கம், புலின்னு நிறைய விலங்குகள் இருந்துச்சு. 2000-ல் அரசாங்கம் விலங்குகளைக் காட்சிப்படுத்த தடைபோட்டதிலிருந்து கூட்டமும் குறையத் துவங்கிடுச்சு. போதாதுக்கு, சினிமா, தொலைக்காட்சி சேனல்கள், இணையதளம்னு பெருகி சர்க்கஸை மொத்தமா படுக்கவெச்சிருச்சு. இந்தியாவில் ‘ஏ கிரேடு’ சர்க்கஸ் கம்பெனிகள் மட்டுமே 23 இருந்துச்சு. அதுல வெறும் 8 தான் இப்ப இருக்கு. இதுக்கு முக்கியக் காரணமே விலங்குகளுக்கு அரசு போட்ட தடைதான். வெறுமனே, நாய், கிளி, குதிரை, ஒட்டகத்தை வெச்சு எத்தனை நாளைக்கு ஓட்டுறது? ஜம்போ சர்க்கஸோட லோகோவே யானைதான். ஆனா, இப்ப யானையையும் சர்க்கஸில் பயன்படுத்த தடைவிதிச்சிட்டாங்க.
சர்க்கஸ் கலைஞர்கள் முறையா ஜிம்னாஸ்டிக் கத்துருக்கணும். உடலை ரப்பராய் வளைக்கும் அந்தப் பயிற்சியை திடீரென வாலிப வயதில் குடுக்க முடியாது. சிறுபிள்ளையிலிருந்தே பயிற்சி கொடுக்கணும். அப்படிக் கொடுத்தால் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சினை வருகிறது. பல நாடுகளில் படிப்புடன் இத்தகைய பயிற்சிகளையும் கொடுக்கிறாங்க. ஆனா, இங்க அப்படிச் செய்யுற தில்லை. இதுபோன்ற பல காரணங்களால் சர்க்கஸ் தொழில் சங்கடத்துக்குப் போய்க்கிட்டு இருக்கு” என்கிறார் வர்க்கீஸ்.
அதிகம் படிக்கவில்லை என்றாலும், தேசமெங்கும் சுற்றுவதால் ஒவ்வொரு கலைஞரும் ஐந்து மொழிகளை அறிந்து வைத்திருக்கிறார்கள். இரண்டரை மணி நேரத்தில் 27 வகையான சாகசங்களை அரங்கேற்றுகிறார்கள். மொத்தமாக 150 கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், பகல்நேரக் காட்சிகளில் இவர்களைவிட குறைவாகவே இருக்கிறது பார்வையாளர்கள் எண்ணிக்கை. தினமும் மூன்று காட்சிகளை நடத்த 80 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில், கையைக் கடிக்காமல் சர்க்கஸை நடத்துவதே தினமும் இவர்களுக்கு மிகப்பெரிய சாகசமாய் இருக்கிறது. வார நாட்களின் வருவாய் இழப்பை சனி, ஞாயிறு வருமானங்கள் ஓரளவுக்கு ஈடுகட்டுகின்றன.
ஓரிடத்தில் சர்க்கஸ் முடிந்தால் அடுத்த இடத்தில் சர்க்கஸ் தொடங்க ஒரு வாரம் ஆகும். காட்சிகள் இல்லாத அந்த ஒருவாரத்துக்கான செலவையும் சமாளிக்க வேண்டிய கட்டாயமும் கம்பெனிக்கு இருக்கிறது. கம்பெனிக்கு இதுஒரு பிரச்சினை என்றால், சர்க்கஸ் கலைஞர்களுக்கு, குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை, குழந்தைகள், அவர்களது எதிர்கால முன்னேற்றம், உடல்நிலை பாதிப்பு, சுற்றம், நட்பு, இழப்புகள், இன்னல்கள் என ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள். அத்தனையையும் தங்களுக்குள் புதைத்துக்கொண்டு அரிதாரம் பூசுகிறார்கள். அது வெறும் வருமானத்துக்காக அல்ல.. தாங்கள் படித்த வித்தையை எப்படியாவது அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டுமே என்ற கட்டாயத்துக்காக!
படங்கள் உதவி: ராஜேஷ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT