Published : 23 Aug 2017 12:02 PM
Last Updated : 23 Aug 2017 12:02 PM
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து தமிழக மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என காந்தி கிராம கல்வியியல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிஎஸ்சிஇ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது, செப்.4-ம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அதனால் தமிழக மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரும், காந்தி கிராம கல்வியியல் துறை தலைவருமான ஜாகீதா பேகம் கூறியதாவது: மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தற்போது நாம் சிறந்த மாணவர்கள் என்பதை தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே தீர்மானிக்கிறோம். இது சரியா?, சிறந்த பாடத்திட்டம் என்பதை நாம் எதை வைத்து தீர்மானம் செய்கிறோம்? என்பதில் தற்போது குழப்பம் இருக்கிறது. ‘கன்டென்ட் அனாலிசிஸ்’ முறையில் சி.பி.எஸ்.சி., மாநில பாடத் திட்டத்தின் அனைத்து பாடப்புத்தகங்களையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதேபோல், இரண்டு பாடத்திட்டங்களிலும் படித்த மாணவர்களின் அறிவுத் திறன்கள் சோதிக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையிலே தான் ‘எந்த பாடத்திட்டம்’ சிறந்தது என்ற முடிவை எடுக்க முடியும்.
பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு பள்ளி கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதற்கு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்திடம் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது மாநில பாடத்திட்டம் சரியில்லை என்று கூறுவது வெறும் கருத்துகளாக மட்டுமாகவே பார்க்க முடியும். எந்த ஒரு கருத்தையும் சோதிக்காமல், அதனுடைய உண்மைத் தன்மையை அறிய முடியாது.
உயர் சிந்தனைத் திறன்கள் கொண்ட வினாக்களால் மட்டுமே மாணவர்களை தரம் பிரித்து அறிய முடியும். அதனால் போட்டித் தேர்வே கூடாது என்று கூறுவதைவிட போட்டித் தேர்வுகளை ஏற்றுக் கொள்ள நம் மாணவர்கள் முன் வர வேண்டும்.
அப்போதுதான் அவர்களின் உண்மையான அறிவுத் திறன்கள் வெளிப்படும். அதே சமயம் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு முன்பே வரையறை செய்யப்பட வேண்டும். அந்தப் பாடத்தில் எந்த முறையில் வினாக்கள் அமையும் என்று ‘மாதிரி வினாக்கள்’ கொடுக்கப்பட வேண்டும். அந்த பாடங்களை பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கொண்டு வர முடியும்.
பின்னர் கால அவகாசம் வழங்கி தேர்வு அறிவிக்கப்படும்போது மாணவர்கள் முன்பே அதற்காக தங்களை தயார் செய்து கொள்ள முடியும். சிறந்த கல்வியாளர்களை கொண்டு உருவாக்குகிற தமிழ்நாட்டு பாடத்திட்டம் சரியான முறையில் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டால் சரியான மதிப்பீடும் பின்பற்றப்பட்டால் சிறப்பாக அமையும். பிற மாநிலங்களின் பாடப்புத்தகங்களோடு தமிழ்நாடு பாடப்புத்தகங்களை ஒப்பிடுகையில் பல்வேறு காரணிகளில் நம் மாநில புத்தகங்கள் முதன்மையான இடம் பிடித்துள்ளன. கிராமப்புற மாணவர்களின் அறிவுத் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது. சரியான ஆசிரியர்களையும், இன்றைய தகவல் தொழில்நுட்பத்திறனாலும் அவர்களால் சாதிக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT