Published : 07 Aug 2017 10:01 AM
Last Updated : 07 Aug 2017 10:01 AM
தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் கடந்த 2 நாட்களாக 10 கோடி யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்த பயன்பாட்டில் சுமார் 35 சதவீதத்தை காற்றாலைகள் பூர்த்தி செய்துள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தியில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக காற்றாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மின் தேவையை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது.
12 ஆயிரம் காற்றாலைகள்
நாட்டில் நிறுவப்பட்டுள்ள சுமார் 25 ஆயிரம் காற்றாலைகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தமிழகத்தில்தான் உள்ளன. இவை மொத்தம் 7,850 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. காற்றின் வேகத்தைப் பொறுத்து அதிகபட்சமாக 5 ஆயிரம் மெகாவாட் வரை உற்பத்தியாகும்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. இந்த நிலையில், வரலாறு காணாத வகையில், தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் 10 கோடி யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக காற்றாலை உற்பத்தியாளர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 3-ம் தேதி 10.15 கோடி யூனிட்டும், 4-ம் தேதி 10.26 கோடி யூனிட்டும் காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
மொத்த பயன்பாடான 29.80 கோடி யூனிட்டில், சுமார் 35 சதவீதம் காற்றாலை மூலம் உற்பத்தியாகியுள்ளது. இதுவரை 9.80 கோடி யூனிட் மின்சாரம்தான் அதிக அளவாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. தற்போது முதன்முறையாக 10 கோடி யூனிட்டுக்கும் மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
5 ஆயிரம் மெகாவாட்
அதேபோல, ஒரே நேரத்தில் அதிகபட்ச அளவாக 5,084 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது மிக அதிக அளவில் காற்று வீசுவதால், அதிக மின்சாரம் உற்பத்தியாகிறது.
இந்திய காற்றாலைகள் சங்கம் சார்பில், காற்றின் வேகம், தன்மை குறித்த முன்னறிவிப்பை 24 மணி நேரத்துக்கு முன்பாகவே தேசிய காற்றாலை மின் உற்பத்தி பயிலகம் மற்றும் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அறிவிக்கிறோம்.
இதனால், அனல் மின் உற்பத்தியை சற்று குறைத்துக்கொண்டு, காற்றாலை மின்சாரத்தை முழு அளவில் தமிழ்நாடு மின் வாரியம் பயன்படுத்துகிறது.
காற்றாலைகளின் அதீத மின் உற்பத்தி காரணமாக, தமிழகத்தின் மின் தேவை முழுமையாகப் பூர்த்தியாகியுள்ளது. சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி உள்ளது. எனவே, வெளி மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்கலாம் என்றும் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளோம்.
தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், இன்னும் 15 சதவீதம் வரை கூடுதல் மின்சாரத்தைப் பெற முடியும். காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த மின் வாரியத்தை வலியுறுத்தி உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT