Published : 26 Aug 2017 04:18 PM
Last Updated : 26 Aug 2017 04:18 PM

1 ஆண்டு; 900 அடி ஆழம்: 100 ஆழ்குழாய் கிணறுகள்- வெள்ளியங்காடு ஓடைக்கரையில் அதிர வைக்கும் விவசாயிகள்

ஆற்றங்கரைகளிலும், ஆற்றுக்குச் செல்லும் ஓடைகளிலும் பெயரளவுக்கு கிணறு தோண்டினாலே வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றெடுக்கும். ஆழ்குழாய்களுக்கு எந்த அவசியமும் இருக்காது. 'அப்படித்தான் எங்கள் பகுதியில் தண்ணீரும் இருந்தது. கரும்பு, வாழை விவசாயமும் ஏகபோகமாக நடந்தது. ஆனால் இப்போதெல்லாம் இங்கேயே 600 அடி, 900 அடி ஆழ ஆழ்குழாய் கிணறுகள் தோண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி கடந்த ஆண்டு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் இங்கே தோண்டப்பட்டுள்ளன!' இப்படியொரு அதிர்ச்சி தகவலை வெள்ளியங்காடு பகுதி விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

கோவை மாவட்டம் காரமடையிலிருந்து பில்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு. பில்லூர் அணையிலிருந்து வரும் பவானி தண்ணீர் இங்கே உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டே கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. இப்படி சுத்திகரிக்கப்படும் நீரில் வெளியாகும் கழிவு மற்றும் உபரி நீர் பக்கத்தில் உள்ள குட்டைகளில் தேக்கப்பட்டு அங்கிருந்து செல்லும் ஓடை வழியே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெல்லித்துறை பகுதியில் பவானி ஆற்றில் சேருகிறது. இந்த தண்ணீர் செல்லும் வழியில் வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர், பாறைப்பள்ளம், பனைப்பாளையம் புதூர், சாலவேம்பு, தேவனாபுரம், விவேகாநந்தபுரம், நஞ்சே கவுண்டன்புதூர், தேக்கம்பட்டி உள்ளிட்ட கிராமத்து விவசாயம் செழித்து வந்தது.

இப்படியிருக்க கடந்த சில வருடங்களாக வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலையம் அருகிலேயே ஆயில் இன்ஜின்கள், சோலார் மின்சார மோட்டார்கள் நூற்றுக்கணக்கில் பயன்படுத்தி குழாய்கள் வழியே 3 முதல் 5 கிலோமீட்டர் தூரம் வரை தண்ணீர் முறைகேடாக தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள் பலர். அதில் விவசாயிகள் மட்டுமல்லாது, மினரல் வாட்டர் கம்பெனிக்காரர்களும் உள்ளனர். இதனால் குட்டையிலிருந்து அரை கிலோமீட்டருக்கு மேல் தண்ணீர் ஓடைக்கு செல்வதில்லை. சுருக்கமாகச் சொன்னால் நெல்லித்துறை வரையுள்ள 9 கிலோமீட்டர் தூர ஓடையும் வறண்டு, மழை பெய்தால் மட்டும் தண்ணீர் வரும் நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் இந்த ஓடையை ஒட்டியே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆட்சியர் விவசாய குறைகேட்பு கூட்டத்தில் பலமுறை இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

ஒரு முறை நம் 'தி இந்து' தமிழ் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். சில பம்ப் செட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதுவும் சில நாட்கள் மட்டுமே நடந்தது. மறுபடி மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சிக் கொண்டு போக ஆரம்பித்து விட்டனர் நீர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள். அதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இந்த ஓடையோரம் உள்ள விவசாயிகள் தங்கள் கிணறுகள் சுத்தமாக தண்ணீர் வற்றிய நிலையில் ஆழ்குழாய் கிணறுகள் போட ஆரம்பித்து விட்டார்கள். அதன்படி இந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட் ஆழ்குழாய் கிணறுகள் இந்த ஓடையின் ஓரங்களில் மட்டும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து இப்பகுதி விவசாயி மூர்த்தி கூறுகையில், 'குட்டைக்கு அரை கிலோமீட்டர் தூரத்தில்தான் பாறைப்பள்ளத்துல எங்க தோட்டம் இருக்கு. ஓடைக்கு 100 மீட்டர் தூரத்திலதான் எங்க கிணறு. எந்தக் காலத்திலும் வற்றினதில்லை. இப்ப சுத்தமாக வற்றிடுச்சு. அதனால் ஓடைக்கு 200 அடி தூரத்திலேயே ஆழ்குழாய் கிணறு போட்டேன். 600 அடியில்தான் தண்ணி கிடைச்சிருக்கு. இதுக்கு ரூபாய் 2 லட்சம் வரை செலவாயிருக்கு. இன்னும் பல பேர் மூணு ஆழ்குழாய் கிணறு, நாலு ஆழ்குழாய் கிணறுன்னு தோண்டி 800 அடி, 900 அடின்னு தோண்டி அஞ்சாறு லட்சம் கூட இழந்திருக்காங்க. அதுல ஒண்ணு தண்ணி கிடைக்காது. இல்லே மோட்டார் இறக்கும்போது கல் விழுந்து மாட்டி வேற கிணறு தோண்டனும். இப்படி நிறைய நஷ்டப்பட்டாச்சு. இப்படியே இது போனா சீக்கிரம் இந்தப் பகுதி பாலைவனம் ஆகிவிடும்!' என்று மூர்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x